தமிழ் சினிமாவின் மிகவும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் படம் குறித்து அவர்களின் அனுபவம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தனர்.
'தங்கலான்' படத்தின் கதாநாயகி பார்வதி திருவோத்து, கங்கம்மாள் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்துள்ளார். அவரின் அனுபவம் குறித்து மேடையில் பேசுகையில் என்னால் கங்கம்மாள் கதாபாத்திரத்தில் இருந்து இன்னும் கூட வெளியில் வர முடியவில்லை. வரவும் மாட்டேன். முதலில் நான் என்னுடைய டீமுக்கு நன்றிகளை சொல்ல வேண்டும்.
ஜி.வி. பிரகாஷ் இந்த படத்துக்கு கொடுத்த இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திவிட்டது. ஸ்டூடியோ கிரீன், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. பா. ரஞ்சித் படத்தில் நடிக்க வேண்டும் என பல நாட்களாக நான் ஆசைப்பட்டுள்ளேன். அது நடக்குமா இல்லையா என எனக்கு தெரியாது. ஏற்கனவே ஒரு வாய்ப்பு வந்து அது தட்டிப்போனது. ஒரு வேலை நான் கங்கம்மாளாக தான் இருக்க வேண்டும் என இருந்து இருக்கு போல. அதனால் இந்த கேரக்டருக்கு அழைப்பு வந்ததும் ஓகே சொல்லிவிட்டேன்.
ஆனால் பா. ரஞ்சித்தை பல கேள்விகள் கேட்டு கொடஞ்சு எடுத்துட்டேன். அவரும் பொறுமையாக அனைத்தையும் எடுத்து சொன்னார். இப்படத்தில் கங்கம்மாவாக வாழ எனக்கு ஒரு வாய்ப்பு பரிசு கொடுத்ததற்கு மிக்க நன்றி.
நான் இதுவரைக்கும் 30 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். பல நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் ஒரு நடிகருக்கு இருக்க வேண்டிய அந்த பணிவை டெடிகேஷனை ஒட்டுமொத்தமாக சியான் விக்ரமிடம் பார்த்தேன். இந்த கங்கம்மாளுக்கு என்றுமே அவர் தங்கலான்தான். இந்த தங்கலான் இல்லாமல் கங்கம்மாள் இல்லை. அவர் இல்லாட்டி நான் எப்படி இந்த கேரக்டர் பண்ணி இருப்பேன் என எனக்கு தெரியல.
விக்ரம் சார் பண்ணி இருக்க இந்த தங்கலான் கேரக்டரை இதுக்கு முன்னாடி இந்த உலகம் இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது. இன்னும் சொல்ல போனால் படம் பார்க்க நீங்க யாருமே இன்னும் தயாராக இல்லை. உங்களுக்கு திரையில் என்ன நடக்க போகிறது என்பது தெரியாது. அதனால் அதை பார்க்க ரெடியாக இருங்கள். விக்ரம், பசுபதி சார், டேனியல், மாளவிகா இவங்க எல்லாரும் நடிக்கும் போது நான் தூரத்திலிருந்து பார்த்து கொண்டேயிருப்பேன். அவங்க எல்லார்கிட்டேயும் இருந்து நிறைய கத்துக்கிட்டேன்.
சினிமா என்பது எண்டர்டெயின்மெண்ட், பிளாக் பஸ்டராக இருந்தாலும் அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவது எதேச்சையானதாக இல்லை. சுதந்திரம் என்ற வார்த்தையை நாம் மிகவும் சாதாரணமாக எடுத்து கொள்கிறோம். ஏற்றத்தாழ்வு ஏன் வருகிறது என்பதை பற்றி நாம் படிச்சுக்கிட்டே இருக்கணும். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பர்சனல் விஷயம் என்பது அரசியலோடு சம்பந்தப்பட்டதுதான், கலை என்பது அரசியல்தான். ரஞ்சித் அதற்காக ஒரு ஆர்மியை வழிநடத்தி வருகிறார். அதில் நானும் ஒரு படைவீரராக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி என பேசி இருந்தார் நடிகை பார்வதி.