தமிழ் சினிமாவில் காலங்களால் அழியாத கடந்து போக முடியாத சில தரமான படைப்புகளில் ஒன்று இயக்குநர் அமீரின் 'பருத்திவீரன்' திரைப்படம். நடிகர் கார்த்தி அறிமுகமான இப்படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சரவணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் மிகவும் துணிச்சலான பெண்ணாக முத்தழகு என்ற கேரக்டரில் நடித்திருந்தார் பிரியாமணி. இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
சிறு வயது முத்தழகு கேரக்டரில் சிறுமியாக கார்த்திகா தேவியை யூடியூப் சேனல் ஒன்று பேட்டி கண்டுள்ளது. அப்போது அவர் பருத்திவீரன் படத்தில் நடித்தது பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு பருத்திவீரன் படத்தோட ஷூட்டிங் நடந்துது. நிறைய கத்துக்கிட்டேன், விளையாட்டுத்தனமா இருக்கேன்னு நிறைய திட்டும் வாங்கினேன். ரொம்ப ஜாலியா இருக்கும். கிணத்துல குதிக்குற அந்த சீன் எல்லாம் மூணு நாலு நாளைக்கு எடுத்தாங்க. நாலு நாளைக்கு கிணத்துக்குள்ளேயே தான் இருந்தோம்.
படம் ரிலீஸானதுக்கு அப்புறம் யாருமே என்னை கண்டுக்கல. நாங்க அந்த சமயத்துல ரொம்ப கஷ்டப்படுறோம் என அவங்களுக்கு தகவல் சொல்லி அனுப்புனோம். ஆனாலும் அவங்க எந்த உதவியும் செய்யல. இந்த படத்துக்கு அப்புறம் 'உடுமன்' அப்படினு ஒரு படத்துல நடிச்சேன். ஆனா அது ரிலீஸ் ஆச்சா என்னனு தெரியல. விஜய் டிவி சீரியலில் நடிக்க எல்லாம் கூப்பிட்டாங்க. அதுக்கு எல்லாம் நடிக்க போகல.
கார்த்திகா தேவியின் அம்மா பேசுகையில் "நல்லா படிக்குற பிள்ளை. டேலெண்டா இருக்குன்னு சொல்லி நடிக்க கூப்பிட்டாங்க. சரி வீட்டு கஷ்டத்தை நினச்சு நாங்களும் அனுப்பிவைச்சோம். ஆனா அவங்க அப்பப்ப பிள்ளையை பார்க்க போகும் போதெல்லாம் 100, 500ன்னு குடுத்து அனுப்பிடுவாங்க, வேற எதுவுமே அவங்க செய்யல. சரி பிள்ளை நடிக்குது நம்ம வீட்டு கஷ்டம் தீரும்னு நினைச்சோம். ஆனா ஒரு பொம்மை மாதிரி நடிக்க கூட்டிட்டு போவாங்க அவ்வளவு தான். எந்த உதவியும் செய்யவேயில்லை. பிள்ளையோட படிப்புக்கு சலுகை செய்றேன்னு சொன்னாங்க. அதுவும் செய்யல.
கார்த்தி எங்க வீட்ல தான் சாப்பிடுவார். நான் தான் அவருக்கு கறி எல்லாம் சமைச்சு போடுவேன். பிரியாமணி கூட எங்க வீட்ல தான் இருக்கும். மீன் குழம்பு தான் அமீர் அடிக்கடி கேப்பார். ஒரு ஐந்து தடவை மீன் குழம்பு செஞ்சு குடுத்து இருக்கேன். சரவணனுக்கு கூட சமைச்சு போட்டு இருக்கோம்.
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்க பக்கத்துல தான் நடிக்க வந்தாரு. பருத்திவீரன் படத்துல நடிச்ச பிள்ளை இங்க இந்த ஊர்ல தான் இருக்குனு நாங்க போய் அவர் கிட்ட சொன்னோம். ஆனா அப்ப கூட அப்படியா இங்க தான் இருக்கா? நல்லா இருக்கா? அப்படினு கேட்டுட்டு விட்டுட்டாரு. வந்து பார்க்க கூட இல்லை.
ஒரு வேலை கார்த்தி சார் இல்லை அமீர் சார் இரண்டு பேரும் பாத்தாங்கன்னா என்னோட பிள்ளைகளுக்கு ஏதாவது உதவி செய்வாங்க. நாங்க இப்ப ரொம்ப கஷ்டப்படுறோம். அவர் பார்த்து ஏதாவது உதவி செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் என வருத்தமாக பேசி இருந்தார் கார்த்திகா தேவியின் அம்மா.