சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்று வழங்கியுள்ளது. இதன்மூலம் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதியான நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரவி மோகன், அதர்வா முரளி, சேத்தன், ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இது சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ளது. அதேசமயம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் 100வது படைப்பாகும். இப்படி சிறப்பு வாய்ந்த பராசக்தி படம் பல்வேறு மொழிகளிலும் வெளியாகிறது. இப்படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 3ம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு விமரிசையாக சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. தொடர்ச்சியாக ஜனவரி 4ம் தேதி அப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கடந்த டிசம்பர் மாதம் கடைசியில் பராசக்தி படத்துக்காக பயன்படுத்தப்பட்ட 1960களின் செட் பொருட்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவை அனைத்தும் பராசக்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுவதாக குற்றச்சாடு எழுந்தது. இந்த நிலையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் படம் பார்க்கும் வகையில் யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி இப்படம் ஜனவரி 10ல் வெளியாகிறது.
ஏற்கனவே பிற நாட்களுக்கான முன்பதிவு நடைபெற்ற நிலையில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன்மூலம் ரஜினி முருகன், அயலான் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் 3வது பொங்கல் ரிலீஸாக பராசக்தி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்தில் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல் அதர்வா முரளி சிவகார்த்திகேயன் தம்பி கேரக்டரிலும், சேத்தன் அறிஞர் அண்ணா கேரக்டரிலும் நடித்திருக்கின்றனர்.
ஜனநாயகன் படம் ரிலீசாகாத நிலையில் அப்படத்துக்கு ஒதுக்கப்பட்ட ஸ்கிரீன்கள் பராசக்தி படத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.