Parasakthi: பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு, விஜய் ரசிகர்கள் தீவிரமாக பதிலடி அளித்து வருகின்றனர்.

Continues below advertisement

ஏமாற்றம் தந்த பராசக்தி?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி, கடந்த 10ம் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தி திணிப்புக்கு எதிரான கதைக்களம், விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் வியூஸ் சாதனையை முறியடித்தது என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பராசக்தி வெளியானது. ஆனாலும், மோசமான திரைக்கதை காரணமாக ரசிகர்களை திருப்திபடுத்த இந்த படம் தவறவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தொடர் விடுமுறையால் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் அளிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பராசக்தி படத்தின் தயாரிப்பு தரப்புக்கும், விஜய் ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் வார்த்தை போர் வெடித்துள்ளது.

Continues below advertisement

புலம்பிய தயாரிப்பு தரப்பு

பராசக்தி திரைப்படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசரான தேவ் ராம்நாத் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுடன் சேர்ந்து ஒரு படத்தை வெளியிடுகிறோம் என்பதற்காகவே எங்களது படத்தை சிதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. முதலில் நாங்கள் தான் வெளியீட்டு தேதியை அறிவித்தோம். உங்கள் படத்தை தடுக்க நாங்கள் முயற்சித்தோமா? இல்லை. பிரச்னைகளை தீர்க்க சென்னை மற்றும் மும்பையில் தணிக்கை குழு அலுவலகத்திற்கு நான் ஒவ்வொரு நாளும் சென்றேன். உங்களது குழுவை போன்றே நாங்களும் தணிக்கையில் பிரச்னைகளை எதிர்கொண்டோம்.வெளியீட்டிற்கு 18 மணி நேரத்திற்கு முன்பாகவே எங்கள் படத்திற்கு சான்று கிடைத்தது. எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்கள், மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவது, திரையரங்குகளில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது, புக் மை ஷோ செயலி ரேட்டிங்கில் விளையாடுவது இதெல்லாம் போட்டியல்ல. கடந்த ஆண்டு வெளியான ஒரு பெரிய படத்திற்கும் இதையே தான் செய்தீர்கள்.

”ஆரோக்கியமானது அல்ல”

சினிமா ரசிகனாக சொல்கிறேன், இது நமக்கு ஆரோக்கியமானது அல்ல. பராசக்தி திரைப்படம் மாணவர்களின் இயக்கத்தை பற்றியது, அதை கண்டு தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும். எங்களது மாணவர்களை போன்று நாங்களும் இதை எதிர்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் விஜய் ரசிகர்கள் என நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், ஸ்பேஸில் விஜய் புகைப்படத்தை டிபி-ஆக கொண்ட சிலர் குழுவாக பேசுவது தொடர்பான புகைப்படம் ஒன்றை தேவ் ராம்நாத் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விஜய் ரசிகர்கள் தான், பராசக்தி படத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள்:

பராசக்தி படத்தின் தயாரிப்பு தரப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு, விஜய் ரசிகர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றி வருகின்றனர். கேரளா விஜய் ஃபேன்ஸ் க்ளப் என்ற சமூக வலைதள கணக்கில், “

  • உங்கள் முதலாளிகள் ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் தடுத்துவிடுவார்கள் என அறிந்து, பராசக்தியின் வெளியீட்டு தேதியை 14ம் தேதியிலிருந்து 10ம் தேதிக்கு மாற்றினீர்கள்
  • ஒருவேளை ஜனநாயகன் வெளியானாலும் நீண்ட நாட்களுக்கு படம் ஓடக்கூடாது என்பதற்காக ஜனவரி 23ம் தேதியன்று மங்காத்தா படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டீர்கள்

உங்களது படத்தை வெற்றி பெற செய்ய இவ்வளவு கீழ்நிலைக்கு சென்றுவிட்டு, தற்போது போலி நாடகங்கள் மூலம் அனுதாபம் தேட பார்க்கிறீர்களா?உங்களது அரசியல் நாடகங்களை அனைத்தும் உணர்ந்தே படத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர். 

இது தமிழ்படம் தானே? வரலாற்று படம் தானே? அப்படி இருக்க தமிழில் தமிழ் வாழ்க, தெலுங்கில் தெலுங்கு வாழ்க என்ற வசனம் இடம்பெற செய்ததற்கு வெட்கமாக இல்லையா? புஷ்பா படத்தின் தமிழ் எடிஷனில் கூட, நான் பச்சை தெலுங்கன் என்றே வசனம் இருந்தது. எல்லா வகையிலும் எங்களை சீண்டிய உங்களுக்கு இதுதான் கிடைக்கும். எல்லா படங்களுக்கும் எதிர்வினைகள் என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால் படம் நன்றாக இருந்தால், மக்கள் ஆதரவை யாராலும் தடுக்க முடியாது. அமரன் படத்திற்கு கூட வேறொரு ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு இருந்தது, ஆனால் அதன் வசூல் பாதிக்கப்பட்டதா? எனவே ஒரு தயாரிப்பாளரை போல நடந்துகொள்ளுங்கள்” என பதிலடி தந்துள்ளனர். இதேபோன்று பல விஜய் ரசிகர்களும் பராசக்தி தயாரிப்பு குழுவிற்கு கடுமையாக பதிலடி தந்து வருகின்றனர்.