நடிகர் பங்கஜ் திரிபாதியின் மைத்துனர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பீகார் மாநிலம் தன்பாத்தில் உள்ள நிர்சா நகரில் பங்கஜ் திரிபாதியின் சகோதரி சரிதா திவாரியும், அவரது கணவர் ராகேஷ் திவாரியும் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கினர். இந்த சம்பவத்தில் ராகேஷ் உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சரிதாவை மீட்டு தன்பாத்தில் உள்ள SNMMC மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 






போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பீகாரின் கோபால்கஞ்சிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சனுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சாலையில் அதிவேகமாக வரும் வெள்ளை நிற ஸ்விஃப்ட் கார், நடுவில் உள்ள டிவைடரில் பயங்கரமாக மோதி நிற்கிறது. இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் மிகுந்த அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


கடந்தாண்டு பங்கஜ் திவாரியின் தந்தை தனது 99 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். தற்போது அவரது தங்கை கணவர் விபத்தில் உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ராகேஷ் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பங்கஜ் திரிபாதி: 


அனுராக் காஷ்யப் இயக்கிய “கேங் ஆஃப் வாஸிப்பூர்” படத்தில் சுல்தான் குரேஷி என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் பங்கஜ் திரிபாதி. அவர் தன் சினிமா கேரியரில் 2 தேசிய விருதுகள், பிலிம்பேர், ஓடிடி விருது என பல விருதுகளை வென்றுள்ளார். கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் “மர்டர் முபாரக்” என்ற இந்தி படத்தில் பங்கஜ் திரிபாதி நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.