பஞ்சா வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ள அதிகேசவ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கடும் ட்ரோல்களை சந்தித்துள்ளது.
தெலுங்கில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “ஆதிகேசவா”. இந்த படம் நாளை மறுநாள் (நவம்பர் 24) ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை ராதிகா சரத்குமார், அபர்ணா தாஸ், கேசவ் மற்றும் தீபக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் என் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 21) வெளியானது. அதில் ஹீரோ பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஒருவரை உயிரோடு எரித்து அதில் பீடி பற்ற வைக்கும் காட்சிகள் இடம் பெற்றது இணையத்தில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
தொழில்நுட்பங்கள் மாறி விட்ட இந்த உலகத்தில் நாம் எது செய்தாலும் அது கடுமையான கேலி, கிண்டலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அதில் சினிமா என்றால் சொல்லவா வேண்டும். அன்றைய காலக்கட்டத்தில் நாம் வாயை பிளந்து பார்த்த காட்சியெல்லாம் இன்று இதென்னா கிரிஞ்ச் தனமா இருக்கு என சொல்லிவிட்டு செல்கிறார்கள். இதனால் எப்படித்தான் படம் எடுத்து இவர்களை திருப்தி படுத்த வேண்டுமென படக்குழுவினரும் தெரியாமல் திகைக்கிறார்கள். அதேசமயம் எல்லோருக்கும் படம் எடுத்த காலம்போய் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டும் படம் எடுத்து வெளியிடும் நிலைக்கும் வந்து விட்டார்கள்.
இப்படியான நிலையில் சமீப காலமாக வரும் படங்களின் இடம் பெற்றுள்ள காட்சிகள் “ஒரு நியாயம் வேண்டாமா?’ என ரசிகர்களே கேள்வி கேட்கும் அளவுக்கு இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் வெளியானது. இதில் பைக்கில் செல்லும் ஷாருக்கான் சுருட்டை பற்ற வைக்க தீப்பெட்டி இல்லாத நிலையில் காலில் உள்ள ஷூவை தேய்த்து அதிலிருந்து கிளம்பும் தீப்பொறியில் சுருட்டு பற்ற வைப்பார்.
இதேபோல் கடந்த பொங்கலுக்கு வெளியான அகண்டா படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா காலால் காரை எட்டி உதைக்க அது சில அடி தூரம் பின்னோக்கி செல்லும். அதேபோல் ஆயுத பூஜைக்கு வெளியான பகவாந்த் கேசரி படத்தில் மதுபானத்தை ஒருவர் வயிற்றில் ஊற்றி நெருப்பு வைத்து அதில் டீ கிளாஸை சூடுபடுத்தும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இத்தகைய காட்சிகள் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.