தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும்,  இயக்குனராகவும் வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் ‘கன்னிராசி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து ‘ஆண்பாவம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், இவர் இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆண்பாவம் திரைப்படம் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் போற்றப்படும் திரைப்படமாக உள்ளது. அதற்கு காரணம் அவர் எழுதிய திரைக்கதையும், கதை ஓட்டமும் ஆகும். மிகவும் யதார்த்தமான வகையில் கையாளப்பட்ட திரைக்கதையில் கதையுடன் நகரும் காமெடி காட்சிகள் படத்தை இன்றும் பேச வைக்கிறது. அதுவும் இப்போதும் ரிலேட் செய்துகொள்ளக்கூடிய குடும்ப சூழல்களை கொண்டுள்ளதால் இந்த திரைப்படம் காலம் கடந்தும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நாயகியாக நடித்த சீதாவுடன் ஏற்பட்ட சண்டைகளை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் பாண்டியராஜன்.



ஆண்பாவம் திரைப்படத்தில் நடிகை சீதாவுக்கும் இயக்குனர் பாண்டியராஜனுக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்புக்களை பற்றி கூறும்போது, "அப்பாவுக்கு சுடு தண்ணீர் போடும்போது அதில் வாட்ச் விழுந்துவிடும், அதனை எடுப்பதற்கு முந்தானையை விரித்து வடிகட்டி வாட்சை எடுத்து காதில் வைத்து பார்க்க வேண்டும், இதுதான் ஸீன். ஷூட்டிங் நடக்கும்போது மழை வர ஆரம்பிக்குது, 200 அடி பிலிம்தான் இருக்கு சீக்கிரம் எடுத்து முடிக்கணும். சீதாவுக்கு என்ன பழக்கம்ன்னா நடிச்சு முடிச்சுட்டு கேமராவ பாத்துடுவாங்க. ரெண்டு தடவை அந்த மாதிரி ஆகி போயி நல்ல திட்டிட்டேன், இப்போ முந்தானையை எடுத்து போட்டு வடிகட்டனும்னு சொல்றேன், அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் மேல் பக்க முந்தானை வேண்டாம் கீழ் பக்கம் முந்தானைய எடுத்து போட்டு வடிகட்டுங்கன்னு சொன்னேன், செஞ்சிட்டு உடனே கேமராவ பாத்துட்டாங்க, கோவப்பட்டு திட்டிட்டேன். அந்த பக்க முந்தானை நனஞ்சு போச்சு. ரூம் உள்ள போயி இன்னொரு பக்கத்தை மாத்தி காட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னேன். அப்படி ஷூட் பண்ணினோம், மறுபடி நடிச்சு முடிச்சுட்டு கேமராவ பாத்துட்டாங்க, நான் எத்தன தடவ சொல்றதுன்னு கைய நீட்டினேன், அவங்க முன்னாடி வந்துட்டாங்க, கை கண்ணத்துல பட்டு அறைந்த மாதிரி ஆயிடுச்சு.



அப்புறம் ஒரே அழுகை, அவங்கள சமாதான படுத்த ரொம்ப நேரம் ஆச்சு. அப்புறம் எப்படியோ அந்த சீன எடுத்து முடிச்சோம். அப்புறம் டப்பிங்ல வந்து நான்தான் டப்பிங் பேசுவேன்னு நின்னாங்க. படத்துல ஒரு பையன் வயலின் வாசிக்கிறேன்னு வாயிலேயே சத்தம் கொடுப்பான். அந்த சீன பண்ண சொல்லி போட்டு காமிச்சேன். இதை பாரு இந்த பையனுக்கு தான் உன் வாய்ஸ் செட் ஆகுது, ஹீரோயினுக்கு எப்படி செட் ஆகும் ன்னு சொன்னதும் கோவிச்சுக்கிட்டு போய்ட்டாங்க. அப்புறம் படம் வேலையெல்லாம் முடிஞ்சு ப்ரிவ்யூ பாக்க போறோம், எப்படியோ செய்தி கேள்விப்பட்டு, அங்கேயும் வந்துட்டாங்க. நான் சொல்லிட்டேன், யாரும் பக்க கூடாது, நானும் எடிட்டரும் மட்டும் தான் பாப்போம். நீங்க யாரும் வர வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா அங்க வந்த ஒரே அழுகை. அப்புறம் வேற வழி இல்லாம கூட்டிட்டு போயி காமிச்சோம். படத்தை பாத்து முடிச்சதும், கால்ல வந்து விழுந்தாங்க. நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் சார்ன்னாங்க." என்று கூறி முடித்தார்.