தமிழ்நாட்டில் வெள்ளித்திரைக்கு இணையான அளவிற்கு சின்னத்திரை நடிகர்கள். நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி தொடர் என்பது ஒரு அங்கமாகவே உள்ளது. குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அண்ணன் –தம்பி பாசம், கூட்டுக்குடும்பம் என்று குடும்பப்பாங்கான திரைக்கதை அம்சத்தை கொண்ட இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரம் முதன்மை கதாபாத்திரம் ஆகும். அதேபோல, இந்த தொடரில் இடம்பெற்றுள்ள முல்லை கதாபாத்திரத்திற்கு பெருத்த வரவேற்பு உள்ளது. இந்த கதாபாத்திரத்தில் தொடக்கத்தில் சித்ரா நடித்து வந்தார். ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால், அவருக்கு பிறகு காவ்யா நடித்து வருகிறார்.
விஜே சித்ராவிற்கு பதிலாக தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யாவை ரசிகர்கள் ஏற்கத் தயங்கி வருவதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும், கருத்துக்களும் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், தொடர்ந்து காவ்யாவையே முல்லையாக பார்த்து வரும் ரசிகர்கள் இப்போது அவரை முல்லை கதாபாத்திரத்தில் பொருத்திப்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் புது நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றாற்போல, பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவில் புதிய நடிகை ஒருவர் உள்ள புகைப்படமும் வைரலாகி வருகிறது. அவரது பெயர் அபிநயா என்றும், அவர் மக்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு பிரபல சீரியலான பாக்கியலட்சுமியில் செய்தியாளராக ஒரு காட்சியில் நடித்திருந்தார். அப்போது, கம்பம் மீனா உள்ளிட்ட நடிகைகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகியது. இப்போது, இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினருடன் நடிப்பதற்கு தயாரான நிலையில் மேக்கப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் முல்லையின் தோழியா? அல்லது முல்லையா? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். ரசிகர்களின் கேள்விக்கு வரும் வாரங்களில் விடை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபிநயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல ரசிகர்களும் நீங்கள்தான் அடுத்த முல்லையா? என்று நேரடியாகே கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு அவர் சிரிப்பை மட்டுமே பதிலாக அளிக்கிறார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்