எங்களின் முல்லைக்கு இன்று பிறந்தநாள் என மிகவும் உருக்கமான ஒரு பதிவை சித்ராவின் நினைவாக பகிர்ந்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர்.
தொலைக்காட்சியில் ஒரு விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா பின்னர் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சின்ன பாப்பா, பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி மற்றும் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் சித்ராவை கொண்டாட தொடங்கியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் அடையாளம் முல்லையாகவே மாறியது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தான் சித்ரா அந்த நிலையை அடைந்தார்.
விஜே சித்ரா தற்கொலை :
காதலர் ஹேமந்த்தை 2020ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட சித்ரா, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் பிரமாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தார். ஆனால் திடீரென வெளியான ஒரு செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. டிசம்பர் 9 , 2020 அன்று விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவல் அனைவரையும் நிலைகுலைய செய்தது.
சென்னையை அடுத்த நசரேத் பேட்டையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தனது கணவர் ஹேமந்த் உடன் தங்கி இருந்தார். அங்கு சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அவரின் இந்த தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக ஹேமந்த்தை கைது செய்தனர் போலீசார். இன்றும் இந்த தற்கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஹேமந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது சித்ராவின் மரணம்.
இயக்குனரின் பதிவு :
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இயக்குனர் சிவா சேகர், விஜே சித்ராவின் நினைவுகளை பகிர்ந்து ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று முல்லையின் பிறந்தநாள். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரத்தின் பிறந்தநாள் இன்று. அந்த கதாபாத்திரத்தின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து ஒரு அழகான பதிவை பகிர்ந்துள்ளார். ஒரு சீரியல் கதாபாத்திரத்தின் பிறந்தநாளை இப்படி கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும் என நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த போஸ்ட்க்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதன் மூலம் ரசிகர்கள் நெஞ்சங்களில் முல்லை இன்றும் வாழ்கிறாள்.