தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்று, சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டம். பல்வேறு விமர்சனங்களுக்கு, எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. 






இந்தநிலையில், மாநில திட்ட குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் தலைமையிலான குழு மகளிருக்கான கட்டணமில்லா நகரப் பேருந்து பயணத்திட்டத்தின் பயன்கள் என்ன என்பது குறித்து அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. அந்த அறிக்கையில், ஒரு பெண் பயணி ஒரு மாதத்தில் ரூ.858 சேமித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 





அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தின் பயன்கள்:



  • ஒரு பெண் பயணி ஒரு மாதத்தில் சராசரியாக 50 பயணங்கள் மேற்கொண்டு ரூ. 858 சேமித்துள்ளார்.

  • மாதம் ரூ. 5000க்கும் கீழ் வருமானம் பெறும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் தங்கள் வருவாயில் 28% சேமித்துள்ளனர்.

  • அதிக வருவாய் பெறும் பெண் பயணிகள் மாத வருமானத்தில் 8% முதல் 12% வரை சேமித்துள்ளனர்.

  • ஒட்டுமொத்தமாக, பெண்களுக்கான ஜீரோ-டிக்கெட் பேருந்துப் பயணம் (ZTBT) சென்னை நகரத்தில் உள்ள பெண் பயணிகளுக்குப் பெரிதும் பயனளிக்கிறது.  

  • கிட்டத்தட்ட 80% பயனர்கள் பட்டியல் சாதி (SC) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (BC) குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இதில் SC குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கிட்டத்தட்ட 39% ஆவர். மாநிலத்தில், குறிப்பாக நகர்ப்புற தமிழ்நாட்டின் SCக்களின் பங்கு குறைவாக இருப்பதால், இத்திட்டம் SC பெண்களுக்கு அதிக பயன் தருவதாகத் தெரிகிறது.

  • ரூ.5000 முதல் ரூ.8000 வரை சம்பாதிக்கும் பெண்களுக்கு அவர்களின் வருமானத்தில் 14% சேமிக்கப்படுகிறது.

  • ரூ.8000 முதல் ரூ.12000 வரை சம்பாதிக்கும் பெண்களுக்கு அவர்களின் வருமானத்தில் 8% சேமிக்கப்படுகிறது.

  • MTC பேருந்துகளில் பயணம் செய்வதை 92% பெண் பயணிகள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

  • இந்தத் திட்டம் மூலம் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பெண்களுக்கு ஊக்கமளிக்கிறது.


மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவது உள்ளிட்ட கூடுதல் வீட்டுச் செலவுகளுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் சேமிப்பைப் பயன்படுத்துமாறு பெரும்பாலான பெண் பயணிகள் தெரிவித்துள்ளனர்.