தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பத்மபிரியா. தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பட்டியல், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை பத்மப்ரியா மலையாளத்திலும் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 


மலையாள திரையுலகில் வெளியிடப்பட்ட ஹேமா அறிக்கை கேரளாவில்  மட்டுமின்றி இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளியிடப்பட்ட இந்த அறிக்கையால் தற்போதைய நடிகைகள் மட்டுமின்றி முன்னாள் நடிகைகள் பலரும் அவர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், சீண்டல்கள், தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக பேசுவதுடன் அவரின் கருத்துக்களையும் கண்டனங்களையும் சரமாரியாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். 



அந்த வகையில் தற்போது நடிகை பத்மப்ரியாவும் மலையாள நடிகர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஹேமா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும் அதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்தும் தெளிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை. மலையாள திரைப்பட சங்கமான அம்மாவில் நிர்வாகிகளாக இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது பொறுப்பற்ற செயல்.


இதற்கு காரணமானவர்கள் யார் என்பது தான் ஸ்வாரஸ்யமான விஷயம். மேலும் நடிகர் மம்மூட்டி மற்றும் மோகன் லால் பழைய விவகாரங்கள் குறித்து தங்களுக்கு தெரியாது என கூறிய பதில் வேதனை அளித்தது. அந்த பிரச்சனை குறித்து கவனம் செலுத்த அவர்கள் முயற்சி செய்யாமல் இப்படி பதிலளித்தது ஏமாற்றமாக இருந்தது. 


ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை நான்கரை ஆண்டுகளாக ஏன் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது என்பது குறித்த எந்த விளக்கமும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. அதற்கான தகுந்த விளக்கத்தை அரசு வழங்க வேண்டும். சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விடுவதன் மூலம் இந்த பிரச்னைக்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்காது என பேசி இருந்தார். 


மலையாள திரையுலகில் குரூப் அதிகாரம் இருப்பதால் தான் அவர்களால் இது போன்ற செயல்களில் ஈடுபட முடிகிறது. எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் குறையவும் அது தான் காரணம். தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மலையாள சினிமாவுடன்  அதை ஒப்பிட்டு பார்க்கையில்  மிகவும் அதிகம். 


மேலும் அவர் மலையாள திரையுலகில் நடித்து வந்த சமயத்தில் அவர் எதிர்கொண்ட அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். எனக்கு ஒரு 25 வயது இருக்கும் போது முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் வந்து உங்களுக்கு தான் வயசாயிடுச்சு இல்ல நீங்க நடிப்பதை விட்டுவிடலாமே என கூறினார். இது தான் மலையாள சினிமாக்காரர்களின் பார்வை. பத்மப்ரியா முன்வைத்துள்ள இந்த கருத்து மிக பெரிய கவனம் பெற்றுள்ளது.