படகோட்டி திரைப்படம் எம்.ஜி.ஆர்.,க்கு வெற்றி படம் என்பதை தாண்டி, கவிஞர் வாலி என்பவரை அறிமுகம் செய்த படம் என்கிற வகையில் மிக முக்கியமான படம். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுக்களிடையே நடக்கும் மோதல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் படகோட்டி.


அனைத்து தரப்பு மக்களுக்காகவும் படம் எடுத்த எம்.ஜி.ஆர், மீனவ மக்களுக்காக எடுத்த திரைப்படமாகவும் படகோட்டி பார்க்கப்படுகிறது. படகோட்டி ரிலீஸ் ஆன பிறகு, அவருக்கு மீனவ மக்களின் ஏற்பட்ட க்ரேஸ் அபரிவிதமானது. 


1964 நவம்பர் 3 ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்த படகோட்டி, சிவாஜி கணேசனின் நவராத்திரி மற்றும் முரடன் முத்து ஆகிய இரு படங்களுடன் நேருக்கு நேர் மோதியது. சிவாஜின் இரு படங்களுக்கு நேர் எதிராக மோதி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது படகோட்டி. 






டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் ஜி.என்.வேலுமணி சரவணா ப்லிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அருமையான பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என படகோட்டி, எம்.ஜி.ஆர்., ரசிகர்களை பயங்கர குஷிப்படுத்தியது. எம்.ஜி.ஆர்.,க்கு ஜோடியாக சரோஜா தேவியும், எம்.என்.நம்பியார், மனோரமா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.


‛தரை மேல் பிறக்க வைத்தான்...’


‛தொட்டால் பூ மலரும்...’


‛கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...’


‛கல்யாணப் பொண்ணு...’


‛பாட்டுக்கு பாட்டெடுத்து...’


‛நான் ஒரு குழந்தை...’


‛அழகு ஒரு ராகம்...’


‛என்னை எடுத்து...’


ஆகிய பாடல்கள், எம்.ஜி.ஆர்.,யின் எவர்கிரீன் ப்ளே லிஸ்ட்டாக இன்றும்தொடர்கிறது. 


படகோட்டி படத்திற்கா சிறப்புகள் குறித்து, எம்.ஜி.ஆர்., ரசிகன் என்கிற முகநூலில் எழுத்தப்பட்டுள்ள தகவல்கள் சுவாரஸ்யமானவை. இதோ அவை...

‛‛அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மாபெரும் சக்தியாக விஸ்வரூபமெடுத்து நின்ற எம்.ஜி.ஆர், மக்களின் மனநிலையை மிகத் தெளிவாய் அளந்து வைத்திருந்தார்! அதன்படி, மீனவ சமுதாயத்தின் போராட்டமான வாழ்க்கையை தத்ரூபமாக சொல்லும் ‘படகோட்டி’யில் நடித்தார். 1964 ஆம் ஆண்டில் வந்த’படகோட்டி’யின் வரலாறு காணாத வெற்றியால் கடல்புறத்தில் வாழும் மீனவ மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞரான கண்ணதாசன், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றதும், அந்த இடத்தை கவிஞர் வாலிக்கு கொடுத்து,‘படகோட்டி’யில் எழுத வைத்தார். இதில் வரும் ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ என்கிற பாடல் மீனவ மக்களின் போராட்டமான வாழ்க்கையை வலியுடன் சொன்னது! தன் ஆற்றல் அத்தனையும் தேக்கி ‘படகோட்டி’க்கு எழுதிய வாலி, மக்கள் மத்தியில் சீக்கிரமே பிரபலமானார். கண்ணதாசனுக்கு சற்றும் குறையாத திறமையைக் கொண்ட வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிக் குவித்த பாடல்கள் ஏராளம்!’’


என்று அந்த முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.