தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் விஜயகாந்த். கேப்டன் கேப்டன் என்று எல்லோராலும் அன்பின் மிகுதியோடு அழைக்கப்பட்டார். தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைத்த ரஜினிகாந்த், தான் சாப்பிடும் கறிசோறு  ஷூட்டிங்கில் இருக்கும் தினக்கூலி ஊழியர் வரை சாப்பிட வேண்டும் என நினைத்து, அனைவருக்கும் சமபந்தி விருந்து படைத்த முதல் நடிகர் விஜயகாந்த் தான். இதன் காரணமாகவே இவரை கருப்பு எம்ஜிஆர் என்றும் கூட ரசிகர்கள் அழைத்துள்ளனர்.


இப்போது சினிமாவில் அவர் மட்டுமின்றி அவருடைய பாடல்களும் இல்லாத படங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இயக்குநர்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்த் நடிப்பது போன்று உருவாக்கி வருகிறார்கள். இவ்வளவு ஏன் அவருடைய பாடல்களை வைத்து ஹிட் கொடுத்த படமும் இப்போது தமிழ் சினிமாவில் உண்டு. 




கேபட்டனின் மகன், சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் கூட விஜயகாந்தின் பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு முன் இந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து படத்திலும் இதே பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் தற்போது நடந்து வரும் 22ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலர் நடித்த தங்கலான் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பா ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அதில், அவர் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார். அப்படி என்ன பேசினார் என்றால், பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளி விழாவில் கலந்து கொண்டேன். எனக்கு சரியாக வசனம் பேச தெரியாது. அதனால், என்னை ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு ஆட சொன்னார்கள். நானும் நன்றாக ஆடவே பாராட்டியதோடு ஒன்ஸ் மோர் என்று கேட்டார்கள். பள்ளிப் படிப்பை முடித்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது கதை எழுத ஆரம்பித்தேன். அப்போது எல்லோருடைய ஃபேவரைட் ஹீரோ விஜயகாந்த் தான். அவரை கற்பனையாக வைத்து வில்லன் கதாபாத்திரத்திற்கு கதை எழுதினேன். என்னோட கதையில் அவர் தான் வில்லனாக இருந்தார் என்று கூறியுள்ளார்.