தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பல சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம். அந்த வகையில் முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான திரைப்படம் 'தங்கலான்'.


ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டககிரோன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 



 


கோலார் தங்க வயல் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மிக பெரிய பொருட்செலவில் நீண்ட காலமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது. படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் விக்ரம், பார்வதி, மாளவிகா உள்ளிட்டோரின் நடிப்பில் பாராட்டுகளை குவித்தது.


படம் வெளியான நாள் முதல் வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்ஷனை அள்ளி வருகிறது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்படத்தை வட இந்தியாவிலும் வெளியிட தயாரிப்பு குழு முடிவெடுத்து அதற்கான புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 







இந்நிலையில் 'தங்கலான்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் 100 கோடி வசூலை எட்டியுள்ளது என்பதை மிகவும் உற்சாகத்துடன் தனது எக்ஸ் தள பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம். அவரின் பதிவில் " நீதிக்கும் மக்களுக்கும் ஒரு மகத்தான வெற்றி. இந்த புகப்பெற்ற காவியம் உலககெங்கிலும் 100 கோடியை கடந்துவிட்டது" என பதிவின் மூலம் தன்னுடைய அளவில்லா சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


விக்ரம் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கமெண்ட் மூலம் குவித்து வருகிறார்கள்.