தமிழ் சினிமாவை  ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படும் காலகட்டத்தில் அதன் மூலம் மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமான மக்களின் வாழ்வியலை படமாக்கும் இயக்குநர்களில் ஒருவராக விளங்குகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 


பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட சில நேர்த்தியான கதைக்களம் கொண்ட படங்களை தொடர்ந்து இளம் வயதில் அவர் சந்தித்த சாதி பாகுபாடுகளை மையமாக வைத்து 'வாழை' என்ற படத்தை இயக்கியுள்ளார். நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ளது. பொன்வேல் மற்றும் ராகுல் உள்ளிட்ட சிறுவர்கள் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட ஏராளமான  பிரபலங்கள் கலந்து கொண்டனர். 



 


அந்த வகையில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில் "வீட்ல நடக்குற சின்ன எமோஷனலான விஷயத்தை கூட நான் படத்தில் காட்சியாக கொண்டு வரும்போது அதை என்னால் எடுக்க முடியாமல் எமோஷனலாகி அழுதுவிடுவேன். ஆனால் மாரி செல்வராஜ் அவரோட முதல் படத்திலேயே ரொம்பவும் வலியான ஒரு விஷயத்தை படமாக்கி இருந்தார். இவ்வளவு வலி உள்ள ஒரு படத்தை எடுக்குறியேடா. உன்னை சுத்தி உள்ளவங்க என்னடா சொல்ல போறாங்க அப்படினு நான் கூட கேட்டேன். ஆனால் அதை எடுத்து காட்டுறதுல, எடுத்து பாக்குறதுல, மக்களுக்கு அதை கொண்டு போய் சேக்குறதுல மிகப்பெரிய வேட்கை இருக்கு. அந்த வேட்கையின் தொடர்ச்சியாக தான் அவருடைய படங்களை பார்க்கிறேன். 


மாரி செல்வராஜ் பலமே கதை சொல்லல் தான் என்பது என்னுடைய கருத்து. மிகவும் எளிமையாக கதையை சொல்ல கூடியவர். அவருடைய கதையை மிகவும் நிதானமாக சொல்லி அதை ஜனரஞ்சகமான ஒரு படமாக மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து மக்கள் மத்தியில் அதை  பேசுபொருளாக மாற்றும் வல்லமை கொண்டது தாம் மாரி செல்வராஜின் மொழி. அதை நான் மிகவும் பிரமிப்பாக பார்க்கிறேன். பல சாய்ஸ் இருந்தாலும் இந்த படத்தை இந்த மொழியில் இப்படி தான் சொல்ல வேண்டும் என தேர்ந்து எடுத்து அதன் மூலம் அதை மக்களுக்கு கொண்டு செல்கிறார். 



சில சமயங்களில் கொடுமையாக அவர் சில விஷயங்களை காட்டும் போது எனக்கு பயமா இருக்கும். அவரோட படங்களில் பெயின் காட்டும் போது கைதட்டி கொண்டாடுற கூட்டம் அவன் கர்ணனா நின்று சண்டை போடும் போது அதை வன்முறையா அதை மிகைப்படுத்துறாங்க. அவனோட மொழியை அவன் படைக்கும் போது அதை விமர்சனம் செய்கிறார்கள். பரியேறும் பெருமாள் நல்ல படம்னா கர்ணன், மாமன்னன் என்ன மொக்கை படமா? திருப்பி அடிச்சா அது நல்ல படம் இல்லையா? ஆக மொத்தத்தில் அவருடைய வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக பேச 'வாழை' படம் மூலம் முன்வந்துள்ளார் என பேசி இருந்தார் பா. ரஞ்சித்.