பிரதமர் மோடியை அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருக்கிறார். 


இது குறித்து பா.ரஞ்சித் பேசும் போது, “ எத்தனையோ பேர் பாஜகவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள். அந்தக்கருத்துக்களெல்லாம் ஏன் சர்ச்சையாகமால் இளையராஜா கூறியது மட்டும் சர்ச்சையாகிருக்கிறது. இங்கு கலை மற்றும் கலைஞனுக்கான முக்கியத்துவம் உள்ளிட்டவை முக்கியமானதாக  பார்க்கப்படுகிறது. யாரோ கையில் இருந்த இசையை பிரித்து, அவர் பிரித்து எல்லோருக்குமான இசையாக ஜனநாயகப்படுத்தியது இங்கு மிக முக்கியமானது.


 






அப்படி ஒரு கலைஞரை கைப்பற்றுதலின் மூலமாக அல்லது அவர் மூலமாக ஒரு கருத்தை சொல்வதன் மூலமாக, இங்கே ஒரு பெரிய அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்துவதற்கான வேலைதான் இங்கு நடக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த இடத்தில் ஒரு கலைஞன் எவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


இளையராஜா இது போன்ற சமூக பிரச்னைகள் குறித்தோ இல்லை அரசியல் குறித்தோ பேசியது இல்லை. அவர் எல்லா மேடைகளிலும் இசை குறித்து பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். அவர் வாயில் இருந்து இதை உருவாக்க வேண்டும் என்பதற்காவே இதை நிகழ்த்தி இருப்பதாக நான் பார்க்கிறேன். இன்னொரு விஷயம் இளையராஜா உண்மையிலேயே அதை எழுதினாரா என்பதிலும் சந்தேகம் உள்ளது. இங்கு ஜாதிக்கு எதிராக, மதத்திற்கு எதிராக உருவாகி வரும் சித்தாந்த்தை உடைப்பதற்கான வேலை. நாம் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.” என்று பேசினார். 


முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகளுக்கு பல தரப்பில் இருந்து வரவேற்பும், கண்டனங்களும் எழுந்தன. இதனையடுத்து இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல்கள் எழுந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா கூறியதாக கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.