இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் வட சென்னை வாழ் மக்களிடையே  சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக  அட்டக்கத்தி மற்றும்  மெட்ராஸ் போன்ற திரைப்படங்களை வட சென்னையை மையமாக வைத்து இயக்கியிருந்தார் ரஞ்சித். இதில்  காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அட்டக்கத்தி திரைப்படத்திற்கு இன்றளவு வரவேற்பு உள்ளது. இதற்கு பிறகு  அரசியல் பேசும் படங்கள் எடுப்பதிலேயே ரஞ்சித் கவனம் செலுத்தி வந்தார். எப்போது மீண்டும் காதல் சப்ஜெக்டை கையில் எடுக்க போகிறார் ரஞ்சித் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.  இந்நிலையில்  சார்பட்டா பரம்பரை படத்திற்கான புரமோஷன் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட  இயக்குநர் ரஞ்சித் மீண்டும் காதல் படைப்புகளில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக பிர்சா முண்டா என்ற  சுதந்திர போராட்ட வீரரின் கதையை கையில் வைத்திருக்கும் ரஞ்சித் அதைதான் இயக்க போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  இருக்கிறது இந்த புதிய அறிவிப்பு .


 





தற்போது பல அடுக்கு காதல் கதை ஒன்றை ரஞ்சித் எழுதி உள்ளதாகவும் , அதற்கு “நட்சத்திரம் நகர்கிறது “ என பெயர் வைத்துள்ளதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். பிர்சா முண்டா படத்திற்கு முன்னதாகவே  ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை முடித்துவிட பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. விரைவில்   “நட்சத்திரம் நகர்கிறது “  படத்தில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளை வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்க உள்ளதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் குஷி கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் தற்போது இயக்கியுள்ள  சார்பட்டா பரம்பரை  ஆக்‌ஷன் பிளாக்காக உருவாகியுள்ளது. குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை மற்றும்  இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் வழி வழியாக குத்துச் சண்டையில்  மோதுகின்றன. இறுதியில் எந்த பரம்பரை வெற்றி பெறும்  என்பதை சுவாரஸ்ய கதைக்களத்துடன் உருவாக்கியுள்ளார் இயக்குநர்.  வழக்கமாக ரஞ்சித் படத்தில்  சமூக சிந்தனைகள் மற்றும் சமுதாயங்கள் சார்ந்த  கருத்துகள் அதிகம் இருக்கும். அவை அடையாள அரசியலாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால்   சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் அப்படியான எந்த சாயலையும் பார்க்க முடியாது என படத்தின் நாயகன் ஆர்யா தெரிவித்துள்ளார்.





திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருந்த  படங்களுள்  சார்பட்டா பரம்பரை திரைப்படமும் ஒன்று. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஒடிடியில் வெளியாக உள்ளது. வருகிற ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம்  நிச்சயம் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என படக்குழுவினர் புரமோஷன் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.