தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக வலம் வருபவர் பா. ரஞ்சித். 'அட்டகத்தி' திரைப்படம் மூலம் அறிமுகமான பா. ரஞ்சித் அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களின் மூல சமூக பிரச்சனைகளை துணிச்சலாக கையில் எடுத்து படமாக எடுத்து வந்தார். 




ஒரு இயக்குநராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார். அவரின் தயாரிப்பில் வெளியான படங்களும் சமூக அக்கறை சார்ந்ததாக இருந்து வருகிறது. பரியேறும் பெருமாள், ரைட்டர், ப்ளூ ஸ்டார், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, ஜே பேபி உள்ளிட்ட நல்ல கதை அம்சம் கொண்ட தரமான படங்களை தயாரித்துள்ளார். 


அந்த வகையில் அடுத்ததாக பா. ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டில் ராதா'. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் மற்றும் ஆர்யா இந்த டீசரை அவர்களின் சோஷியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டனர். 



குடியும் அதனால் குடிமகனின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலையும் உணர்த்தும் வகையில் வெளியாகியுள்ள இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மக்களின் கவனம் பெற்றுள்ளது. ஆல் டைம்  மதுபிரியராக குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். அவரின் கலகலப்பான நடிப்பும் அவரின் காமெடியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஊருபுறா டாஸ்மாக்க தொறந்து வைச்சுட்டு குடிக்கிறவன குத்தம் சொல்றது", "குடிச்சு குடிச்சு என் குடும்ப நாசமாக போகுது, அந்த கவலை தான் சார்" என்ற வசனமும் கவனம்பெற்றுள்ளன. இந்த கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



'பாட்டில் ராதா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் நிச்சயம் மது பிரியர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.