தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான திரைப்படம் 'தங்கலான்'. படம் வெளியான நாள் முதல் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தின் நடிகர்கள், ஜி.வி. பிரகாஷ் இசை பெரிய அளவில் பாராட்டுகளை குவித்தது. இந்நிலையில் 'தங்கலான்' படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பா. ரஞ்சித் மேடையில் பேசுகையில் படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா குறித்த தனது நெகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார். ஞானவேல் சார் மாதிரி ஒரு மனிதரை நான் பார்க்காமல் இருந்திருந்தால் என்னுடைய திரைப்பயணம் மிகவும் கடினமானதாக இருந்து இருக்கும். அந்த பயணத்தை இலகுவானதாக அமைத்து கொடுத்தவர். அவருக்கு நான் என்றுமே நன்றியுடன் இருக்க கடமைப்பட்டுள்ளேன்.
'அட்டகத்தி' படத்தை வெளியிடுவதில் ஏராளமான போராட்டம் இருந்தது. ரிலீஸ் பண்ண முடியாது, படம் ஒர்க் அவுட் ஆகாது என பலரும் சொன்னார்கள். அப்படி இருக்கும் போது வெங்கட் பிரபு சார் தான் ஞானவேல் சார், சக்தி, பிரபு எல்லோரையும் அழைத்து வந்தார். படம் பார்த்ததற்கு பிறகும் ஏராளமான மாற்று கருத்துக்கள் அந்த நிறுவனத்துக்குள்ளேயே இருந்தது. அது எல்லாத்தையும் மீறி படத்தை ரிலீஸ் பண்ணியே ஆகணும், வெற்றி படமா ஆகியே காட்டணும் என தீவிரமாக போராடி அந்த படத்தை வெளியிட்டார். உடனே அடுத்தடுத்து இரண்டு படங்கள் நான் சைன் பண்ணேன். அப்படி ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பண்ண படம் தான் மெட்ராஸ் மற்றும் தங்கலான்.
இந்த படத்திலும் ஏராளமான பிரச்சினை வந்தது. பட்ஜெட் அதிகமாச்சு, ரிலீஸ் பண்றதில் சிக்கல் இப்படி நிறைய பிரச்சினை வந்த போதும் அது எதையுமே என்னுடைய காதுக்கு கொண்டு வராமல் அவரே சமாளித்தார். என்னோட காதுப்படவே நிறைய பேர் பேசுனாங்க. ஒரு தடவை கூட நீங்க பிரச்சனையில இருக்கீங்களா? படத்தை ரிலீஸ் பண்ண முடியுமா முடியாதா என எந்த ஒரு சந்தேகமும் எனக்கு வரல. எனக்கு தெரியும் அவரால் இந்த படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. அதையும் தாண்டி இந்த படத்தை சிறப்பா ரிலீஸ் பண்ணாரு.
இன்னைக்கு காலையிலே கூட போன் பண்ணிட்டு நீங்க தயாரா இருங்க. பெரிய பட்ஜெட்ல முழுக்க முழுக்க பயங்கர கமர்ஷியலா ஒரு படம் பண்ணறோம். பெரிய நடிகர் ஒருத்தரை நான் கூட்டிட்டு வரேன் அப்படினு சொன்னாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. யாருடா இவர் என் மேல இவ்வளவு நம்பிக்கை வைச்சு இருக்காரு என தோணுச்சு. உங்களோட உழைப்பும் கிராப்ட்டுக்கும் நான் பெரிய ரசிகன் என சொன்னாரு என சொன்னார் ரஞ்சித்