தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொண்டாடப்பட்டு இன்று பான் இந்தியன் நடிகராக கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ஆறுமுக குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 




இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் ஒன்று ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது அது உறுதி  செய்யப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் லீட் ரோலில் நடிக்கும் படம் ஒன்று உருவாக உள்ளது. நித்யா மேனன் கொடுத்த பேட்டி ஒன்றில் இது குறித்து உறுதிப்படுத்தி உள்ளார். 


ஏற்கனவே 19 (1) (ஏ) என்ற மலையாள படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் அவர்கள் ஒரு  படத்தில் இணைவது குறித்து நித்யா மேனன் பேசுகையில் "அந்த படத்தில் எங்க இரெண்டு பேரோட காம்பினேஷன் காட்சி ரொம்ப சின்னதா தான் இருந்துது. இரண்டு நாட்கள் மட்டுமே அதன் ஷூட்டிங் நடந்தது. அப்போ நாங்க இரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும் என பேசி இருந்தோம். இப்போ நாங்க நடிக்க போற இந்த ஸ்கிரிப்ட்டை விட வேற ஒரு  நல்ல ஸ்கிரிப்ட் எங்களுக்கு கிடைச்சு இருக்காது. இந்த படத்தில் நடிப்பதை நான் மிகவும் எக்ஸ்சைடட்டா ஃபீல் பண்றேன். ரொம்பவே யுனிக்கான ஒரு கேரக்டர். வழக்கமா நான் செய்ற ஜானரை காட்டிலும் இது ரொம்பவே வித்தியாசமானது. பல வகையான ஜானர்களில் நடிப்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும்" என பேசி இருந்தார் நடிகை நித்யா மேனன். 






சமீபத்தில் தான் 70வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் வெளியானது. அதில் 2022ம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்ததற்காக  சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படத்தில் ராதிகா என்ற கேரக்டரில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நித்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.