Pa Ranjith: ஒரு புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் ப்ளூ ஸ்டார் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு பிர்ச்சனை செய்ததாக இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் கூறியுள்ளார்.


ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படம் கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளரான பா. ரஞ்சித் சென்சார் போர்டு குறித்து பேசியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர், “சினிமாவில் வெற்றி அவ்வளவு சாதாரணமாக கிடைக்காது. நாம் பேசற அரசியலையும், நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதையும் வைத்து மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நமது வேலையைப் பொறுத்து தான் அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். நீலம் புரொடெக்‌ஷன் படம் வருகிறது என்றாலே சென்சார் போர்டு பிரச்னை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில் இந்தப் படத்திலும் பிரச்சனை வந்தது. ப்ளூ ஸ்டார் படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றது. 


பூவை மூர்த்தியார் படம் உள்ளது. அவர் ரவுடி என கூறினர். பூவை மூர்த்தியார் எங்களை படிக்க வைத்தவர். பெரிய தலைவர் அவர். எங்களை படிக்க வைத்த அவரை எப்படி நீங்கள் ரவுடி என கூறலாம் என கேள்வி வந்தது. எவ்வளவு பேசியும் சென்சார் அனுமதி தர முடியாது என கூறி விட்டனர். பின்னர் ரிவைஸிங்கில் மீண்டும் விண்ணப்பித்தோம். அதில், படத்தில் கேரக்டர்களின் பெயர், டீம் பெயர் என பல மாற்றங்களை கொண்டு வர சென்சார் போர்டு வலியுறுத்தியது. ஒரு படம் ஒற்றுமையைக் கூறுகிறது. இங்கு இருக்கும் வேறுபாடுகளுக்கு எதிராக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறும் படத்துக்கு தடை ஏற்படுத்தும் கருத்து உள்ளவர்கள் தான் சென்சார் போர்டில் உள்ளனர். 


இப்படிப்பட்ட சூழலில் தான் படம் ரிலீசாகி மக்களை சென்று சேர்ந்தது. உங்களுடன் முரண்படுவதற்கும் சண்டையிடுவதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை. ஒருவருக்கு ஒருவர் இருக்கும் வேறுபாடுகள் குறித்து பேச வேண்டும். மக்களுக்கு தெரிய வேண்டியதை அவர்களின் மொழியில் சொல்கிறோம்” எனப் பேசியுள்ளார். சென்சார் போர்டு குறிப்பிட்ட பூவை ஜெகன் மூர்த்தி என்பவர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த அவர், சென்னை சட்டக் கல்லூரியில் படித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியதுடன், சென்னை ரிசர்வ் வங்கியில் உயர் பதவியில் இருந்து வந்தார். 


சிறுவயதில் அம்பேத்கரின் சமூக பணியால் ஈர்க்கப்பட்ட இவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வேலை வாய்ப்பு உதவிகள், வீட்டுமனை உதவிகள், தொழிலாளர் முன்னேற்றம், சுகாதார பணிகள், கட்சி முன்னேற்றம், சமூக போராட்டம் என தனது வாழ்நாளில் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக  போராடியுள்ளார்.