தங்கலான்


பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி , டேனியல் கால்டகிரோன் , அர்ஜூன் , ஆனந்த் சாமி , ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


பா ரஞ்சித் முன்னதாக இயக்கிய சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெளியானது அடுத்தபடியாக  வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் சியான் விக்ரம் நடித்த கோப்ரா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் வெகுஜன ரீதியாக வெற்றிப்படம் தேவையாக இருக்கும் சூழலில் வெளியாகி இருக்கும் படம்தான் தங்கலான்


தங்கலான் விமர்சனம்


பட்டியலின மக்கள் பூர்வ பெளத்தர்கள் என்று முன்வைத்த அயோத்தி தாசரின் வரலாற்றாய்வுகளை அடிப்படையாக கொண்டு தங்கலான் படத்தின் கதையை அமைத்துள்ளார்கள் ரஞ்சித் , தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கோலார் தங்க வயல்களில் இருந்த தங்கத்தை எடுக்க அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்களின் போராட்டங்களையும் அம்மக்களின் வாய்மொழிக் கதைகளை இணைத்து மேஜிக்கல் ரியலிஸம் ஜானரில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். 


சுவாரஸ்யமான கதையைக் கொண்டிருந்தாலும் திரைக்கதை ரீதியாக தங்கலான் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் இப்படத்திற்கு விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.


ரஞ்சித்தின் தனித்துவமான காட்சியமைப்புகள், ஜி.வி பிரகாஷின் இசை, சீயான் விக்ரம் , பார்வதி திருவொத்துவின் வியக்க வைக்கும் நடிப்பு இப்படத்தின் பிளஸ். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப் பட்டிருக்கும் தங்கலான் படத்திற்கு தென் இந்திய ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன


தங்கலான் முதல் நாள் வசூல் 






தங்கலான் படம் முதல் நாளில் உலகளவில் 26.44 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வம தகவல் வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சியான் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். அடுத்து வரக்கூடிய இரண்டு விடுமுறை நாட்களில் தங்கலான் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது