பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் “வானம் கலைத்திருவிழா” என்ற பெயரில் நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாதியை அடையாளமாக காட்டி சிறு வயதில் தீண்டாமை என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட அனுபவம் குறித்து பா. ரஞ்சித் பகிர்ந்து இருந்தார்.
என்னுடைய சொந்த ஊரில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். நாங்கள் அந்த ஊரில் 50 குடும்பங்கள் இருக்கும் ஒரு சிறிய காலனியை சேர்ந்தவர்கள். மேலும் நாங்கள் தலித் என்பதால் அந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது. மோளம் அடிக்கலாம் ஆனால் கோயில் உள்ளே செல்ல முடியாது. ஒரு கயிறு கட்டி வைத்து இருப்பார்கள். மிகவும் கோலாகலமாக தீ மிதி எல்லாம் நடக்கும். அந்த இடத்தில் இருந்து தான் பார்க்க வேண்டுமே தவிர எந்த ஒரு கொண்டாட்டத்திலோ அல்லது பூஜையிலோ கலந்துகொள்ள முடியாது. இந்த தீண்டாமை எனக்கு பிடிக்காததால் நான் பொதுவாக அந்த திருவிழாவில் கலந்து கொள்ள மாட்டேன்.
ஆனால் நான் ஒன்பதாவது படிக்கும் போது எனக்கும் தீ மிதிக்க வேண்டும் என ஆசை வந்தது. அதனால் எனக்கு மிகவும் பிடித்த கங்கை அம்மன் கோயிலில் காப்பு கட்டி தீ மிதிக்கலாம் என நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து முடிவு எடுத்து நாங்களே ஒரு மஞ்சள் கயிறை கட்டிக்கொண்டோம். இது தெரிந்து எங்கள் காலனியை சேர்ந்த சில பசங்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். முதல் நாள் 10 பேர் சேர்ந்தவுடன் வீடு வீடாக போய் அரிசி எல்லாம் வாங்கி வருவோம். இதை பார்த்த அந்த காலனியில் இருந்தவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள பசங்களை எல்லாம் காப்பு கட்டி கொள்ள சொன்னார்கள். சில பெரியவர்கள் கூட வந்து காப்பு கட்டி கொண்டார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த குரூப் பெரிதாகிறது.
நாங்கள் விளையாட்டாக செய்தது ஒரு சடங்காக மாறியது. பொது இடம் என்பதற்காக ஒரு மரத்தை கூட வெட்ட விடமாட்டர்கள். ஆனால் அந்த சடங்கு சமயத்தில் தீ மிதிக்காக எல்லா மரத்தையும் வெட்டினோம் ஆனால் யாருமே எதுவுமே சொல்லவில்லை. மூன்று நாட்களும் வீட்டுக்கு போகக்கூடாது என சொல்லி எங்களுக்கு சாப்பாடு எல்லாம் சமைத்து எடுத்து வந்து கொடுத்தார்கள். மிகவும் சந்தோஷமான ஒரு கொண்டாட்டமாக இருந்தது. தீமிதி அன்று காலனி மக்கள் அனைவரும் கோயிலை சுத்தம் செய்து தீ மிதிக்காக கட்டைகள் எல்லாம் எரிக்கிறார்கள்.
என்னுடைய அம்மா எனக்கு வீட்டில் இருக்கும் நகையை எல்லாம் எடுத்துவந்து அலங்காரம் செய்து விடுகிறார். அனைவரின் கோஷம், அந்த மோளம் அடிக்கும் சத்தம் என அந்த வைப்ரேஷன் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. அனைவரும் ஒரு முறை தான் தீ மிதித்தார்கள். ஆனால் நான் அந்த சந்தோஷத்தில் மூன்று முறை சுத்தி சுத்தி வந்து தீ மிதித்தேன்.
இது தான் ஒரு தலித் வாழ்க்கை. ஊர்ல தீ மிதிக்க ஒரு கதை இருக்கு. அதே போல காலனியில் தீ மிதித்ததுக்கு ஒரு கதை இருக்கு. ஊர்ல என்னை மிதிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் காலனியில் நான் ஒரு கதையை உருவாக்கி நானாக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தியில் நானாக தீ மிதிக்கும் போது ஒரு தலித் லைஃப்பில் ஒரு கதையை உங்களால் பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு இடத்திலும் சாதி அப்பி கிடக்கிறது. ஒரு பொதுவில் இருக்கும் நிலம், மரம் முதல் கடவுள் வரை உனக்கு கிடையாது என சொல்லும் போது அதை எதிர்த்து நான் ஒரு வாழ்க்கையை உருவாக்கினேன்.