தமிழ் சினிமா இதுவரையில் எத்தனையோ ஒளிப்பதிவாளர்களைக் கண்டுள்ளது ஆனால்  ஒருவரின் பெயர் மட்டும் என்றுமே சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கும். அவர் தான் ஐகானிக் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். அவர் இதுவரையில் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் காட்சிக்கு காட்சி மாயாஜாலம் செய்ய கூடிய ஜெகஜால கில்லாடி. இவரின் திரைப்பயணத்தில் ஒரு கேரியர் பிரேக்கிங் படமாக அமைந்தது 'மௌன ராகம்' திரைப்படம். இவருக்கு மட்டும் அல்ல ஐகானிக் இயக்குனர் மணிரத்னத்திற்கும் அந்த திரைப்படம் தான் ஒரு முக்கிய படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



 


தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட என அனைத்து மொழி படங்களிலும் தனது வித்தையை கட்டிய இந்த மகா கலைஞர் தமிழில் கடைசியாக 'ஓ காதல் கண்மணியே' மற்றும் 'ரெமோ' படத்தில் பணிபுரிந்திருந்தார். அதனை தொடர்ந்து இந்தி, தெலுங்கு திரையுலகம் பக்கம் பிஸியாக இருந்து வந்தார். தற்போது தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு பாக்கியம் கிடைத்துள்ளது. பி.சி. ஸ்ரீராம் அடுத்த ப்ராஜெக்ட் தமிழ் சினிமா என்பது தான் மகிழ்ச்சிகரமான செய்தி. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ்மோகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் இணைய உள்ளார் பி.சி. ஸ்ரீராம் எனும் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார்.  இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் இத்தனை நாள் காத்திருப்பு ஒரு மதிப்பு மிக்கதாகும். இந்த நாள் ஒரு இனிய நாள். மழையிலும் ஒரு அழகு இருக்கிறது என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார் பி.சி. ஸ்ரீராம்.  






ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. முதல் படமே ஒரு வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ் மோகன் ஆறுமுகம் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளர், எழுத்தாளர், ரேடியோ ஜாக்கி மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு கொண்டவர். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். 






பி.சி. ஸ்ரீராம் தனது அடையாளத்தை தனது படங்களில் முத்திரையாக பதித்தவர். இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர கேமாரா மேன்களாக இருக்கும் நீரவ்ஷா, திரு, மறைந்த கே.வி.ஆனந்த், ஜீவா உள்ளிட்டோர் இவரது சிஷ்யர்கள். ஒரு குருவாக இருந்து தனது ஒளிவிதையை தனது சிஷ்யர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்துள்ளார் பி.சி. ஸ்ரீராம்.