Netflix Changes: ஒடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் செயலியில் விரைவில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெட்ஃப்ளிக்ஸ் கேம் மூலம் வருவாய்:
Netflix செயலியானது தனது ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மில் கேம்களை அறிமுகப்படுத்தி இரண்டு வருடங்கள் ஆகிறது. அதன்பிறகு இந்த கேம்களை அணுக சந்தாதாரர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தான், ஸ்ட்ரீமிங் நிறுவனமானது தங்களது கேமிங் தளத்தில் இருந்து லாபத்தை ஈட்ட, விரைவில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவலின்படி, "பல மாதங்களாக தனது கேம்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான உத்திகளைப் பற்றி விவாதித்து வருகிறது. செயலிக்குள்ளேயே பொருட்களை வாங்குதல், உயர்தர தலைப்புகளுக்கு பிரீமியத்தை வசூலித்தல் மற்றும் விளம்பர அடுக்கின் கீழ் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும் கேம்களில் விளம்பரங்களைக் காண்பித்தல் ஆகியவை சில ஆலோசனைகளை அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்களில் தீவிரம் காட்டும் நெட்ஃப்ளிக்ஸ்:
கேமிங் சேவையை தொடங்கியது முதல் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 86 கேம்களை வெளியிட்டுள்ளது. அதில், 40 கேம்கள் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இதில், Oxenfree II: Lost Signals மற்றும் Netflix Stories: Love is Blind ஆகியவற்றோடு Football Manager 24 Mobile, Storyteller, and Grand Theft Auto: The Trilogy - The Definitive Edition ஆகியவை அடங்கும். அதோடு, புதியதாக 90 கேம்களை நெட்ஃபிளிக்ஸ் தற்போது உருவாக்கி வருகிறது. ஸ்குவிட் கேம் வெப் சீரிஸ் அடிப்படையில், போட்டியாளர்கள் நேரடியாக மோதிக்கொள்ளும் விதமாக ஒரு கேம் உருவாக்கப்படுகிறது. அண்மையில் வெளியான ரெபெல் மூன் திரைப்படத்தை மையமாக கொண்ட ஒரு கேமும், மணி எய்ஸ்ட் கதையை மையமாக கொண்ட ஒரு கேமும் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் வீடியோ கேம்கள் அனைத்தும் அதிக பொருட்செலவில் உருவாவதால், வருவாய் ஈட்டும் முயற்சிகளை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மட்டும் புதிய கேம்களை உருவாக்குவது, ஸ்டூடியோக்களை வாங்குவது என 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் விளக்கம்:
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வருவாய் தொடர்பான நிகழ்ச்சியின்போது, கேமிங்கிற்கு தேவையான அம்சங்களை விலை கொடுத்து வாங்கும் சேவையை தொடங்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை. கேமிங் பிரியர்களின் விளையாட்டு அனுபவத்தை மேம்படுத்துவதே எங்களின் இலக்கு. அதன் மூலம் வருவாய் ஈட்டுவது எங்களது முதன்மையான நோக்கம் அல்ல” என நெட்ஃப்ளிக்ஸ் இணை நிறுவனர் க்ரேக் பீட்டர்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.