Oscars 2024: பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா (John Cena) ஆஸ்கர் விருது விழாவில் செய்த செயல் தான் இன்றைய ஹாட் டாப்பிக்.


ஆஸ்கர் மேடையில் ஜான் சீனாவின் செயல்


ஆஸ்கர் விருதுகள் எனப்படும் அகாடமி விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலை 4.30 மணிக்குத் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்றைய ஆஸ்கர் விருது விழாவில் பெஸ்ட் காஸ்ட்யூமுக்கான விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஜான் சீனா செய்த செயல் கவனம் ஈர்த்து சிரிப்பலை மற்றும் அதிர்ச்சியை அங்கு உண்டு பண்ணியது. பார்பி பட நடிகை மார்கரேட் ராபி உள்ளிட்ட அங்கிருந்த பலரும் வெடித்துச் சிரித்தனர்.


முதலில் தலையை மட்டுமே காண்பித்து எட்டிப் பார்த்த ஜான் சீனா, பின் ஆடையின்றி மேடையில் தோன்றி அதிர வைத்தார். ஆஸ்கர் அரங்கில் ஜான் சீனாவின் செயல் சிரிப்பை வரவைத்தாலும், இணையத்தில் அவரது செயல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று கவனமீர்த்து வருகிறது.


நிர்வாணமாகத் தோன்றவில்லை


ஜான் சீனா உண்மையில் நிர்வாணமாகத் தோன்றினாரா? இல்லையா என்பது குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில், ஒருபுறம் ஆஸ்கர் விருது விழா கமிட்டிக்கு எதிராகவும் கண்டனங்கள் இணையத்தில் எழுந்தன. இந்நிலையில், ஜான் சீனா நிர்வாணமாகத் தோன்றவில்லை,  ஸ்கின் கலர் உடை அணிந்து தான் அவர் ஆஸ்கர் மேடையில் தோன்றியானார் எனக் கூறி அத்துடன் மேடையின் பின்புறம் அவர் நிற்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


 






எனினும் ஆஸ்கர் மேடைக்கே ஜான் சீனா இழுக்கு விளைவித்துள்ளதாகக் கூறி இணையத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.


 






விருது வென்ற திரைப்படங்கள்


ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்ற நிலையில், சிறந்த நடிகருக்கான விருதினை கிலியன் மர்ஃபியும் சிறந்த நடிகைக்கான விருதினை புவர் திங்ஸ் படத்துக்காக எம்மா ஸ்டோனும் தட்டிச் சென்றனர்.


சிறந்த இயக்கத்துக்கான விருதினை க்ரிஸ்டோஃபர் நோலன் முதன்முறையாக வென்றுள்ள நிலையில், மொத்தம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட மார்ட்டின் ஸ்கார்செஸியின் கில்லர்ஸ் ஆஃப் த ஃப்ளவர் மூன் திரைப்படம் ஒரு விருதினைக் கூட வெல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.