உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆஸ்கர் நாள் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது.


95ஆவது ஆஸ்கர் விழா


தெலுங்கு, தமிழ் சினிமா துறையினர் (ஆர்.ஆர்.ஆர் பட ரசிகர்கள்) தொடங்கி   ஹாலிவுட் வரை விரலைக் கடித்தபடி உலகின் மிகப்பெரும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவான ஆஸ்கர் எனப்பரும் அகாடமி விருதுகள் வழங்கும் விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 


இந்த ஆண்டு குறிப்பாக நாட்டு நாட்டு பாடல் பரிந்துரை காரணமாக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஸ்பெஷல் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். மேலும் இந்தியாவிலிருந்து நடிகை தீபிகா படுகோன் இந்த விழாவில் விருது வழங்குபவராக (presenter) கலந்துகொள்வது மேலும் ஒரு சிறப்பு. 


நடிகர் சூர்யாவும் இந்த ஆண்டு ஆஸ்கர் ஓட்டு செலுத்திய முதல் கோலிவுட் நடிகர் எனும் பெருமையை சேர்த்துள்ளார். இந்நிலையில் 95ஆவது ஆஸ்கர் விழா என்று, எப்போது நடைபெறும் எனப் பார்க்கலாம். 


எங்கு, எப்போது நடக்கிறது?


ஆஸ்கர் விருதுகள் 2023 லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஓவேஷன் ஹாலிவுட் ஷாப்பிங் மால் மற்றும் பொழுதுபோக்கு வளாகத்தில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது.


மார்ச் 12, 2023 (இந்திய நேரப்படி, மார்ச்.13) நடைபெறும் இந்த விழா டிஸ்னி - ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை மறுநாள் - மார்ச் 13ஆம் தேதி காலை 5.30 மணி தொடங்கி ஒளிபரப்பாகிறது.


 






அமெரிக்காவின் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான ஜிம்மி கிம்மல் 95ஆவது அகாடமி விருதுகள் வழங்கும் விழாவை தொகுத்து வழங்குகிறார். இவர் மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்குகிறார்.


சென்ற ஆண்டின் தொகுப்பாளர் க்ரிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில், நகைச்சுவையாளரான ஜிம்மி கிம்மல் நிச்சம் இது குறித்து கேலி செய்து நிகழ்ச்சியை உற்சாகமாகக் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


’நாட்டு நாட்டு’


’நாட்டு நாட்டு’ பாடல் உள்பட ஆஸ்கருக்கு பரிந்துரையாகியுள்ள ஐந்து பாடல்களும் ஆஸ்கர் மேடையில் பெர்ஃபார்ம் செய்யப்பட உள்ளன.


ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஏற்கெனவே கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நிலையில், நாட்டு நாட்டு பாடலைப் பாடிய ராகுல் மற்றும் காலபைரவா இருவரும் முழுவீச்சில் இந்த நிகழ்வுக்காக ஆயத்தமாகி வருகின்றனர் .


இதேபோல், ’ப்ளாக் பாந்தர், வகாண்டா ஃபாரெவர்’ படத்தில் இடம்பெற்ற ’லிஃப்ட் மி அப்’ பாடலை பிரபல பாடகி ரிஹானா பாடவுள்ளார். மேலும், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடித்த ’அப்ளாஸ்’ பட பாடலும்  ஆஸ்கர் மேடையில் ஒலிக்க உள்ளது.


மேலும் கடந்த ஆண்டு மறைந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பழம்பெரும் ராக் இசைக் கலைஞர் லென்னி க்ராவிட்ஸ்  ‘மெமோரியம்' பிரிவில்  பெர்ஃபார்ம் செய்யவுள்ளார்.