அமெரிக்காவில் சர்வதேச சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளின் 95-ம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.  


ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் கடைசி கட்டப்போட்டிக்குத் தேர்வானாது. 


அதன்படி, இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற  நாட்டு நாட்டு பாடல்,  சிறந்த ஆவணப்படம் பிரிவில்  The Elephant Whisperers படமும், Documentary Feature Film பிரிவில் All That Breathes படமும் போட்டியிட்டன.


 சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில், சிறந்த பாடலுக்கான பிரிவில்  நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர். இந்தநிலையில்,  நாட்டு நாட்டு பாடல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஆஸ்கர் நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளர்களுடன் கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்த தீபிகா படுகோனே நாட்டு நாட்டு இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மேடையில் ஏறி விருதை ஏற்றுக்கொண்டபோது உணர்ச்சிவசப்பட்டார்.







மேடையில் இந்த பாடலை பற்றி பேசிய தீபிகா, “ இது நிஜ வாழ்க்கை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோருக்கு இடையேயான நட்பைப் பற்றிய திரைப்படம்தான் இந்த ஆர்.ஆர்.ஆர். முக்கிய காட்சியில் தங்களது எதிர்ப்புகளை பாடலாக ஆங்கிலேயர்களிடம் வெளிப்படுத்தினர்.  இந்த பாடலானது  யூடியூப் மற்றும் டிக்டாக்கில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது, உலகெங்கிலும் உள்ள நகரங்களில் இந்தப் பாட்டைக்கண்ட பார்வையாளர்கள் நடனமாடியுள்ளனர். மேலும் இது இந்தியத் தயாரிப்பில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பாடலாகும்” என தெரிவித்தார். 


ஆஸ்கர் விருதைப் பெற்றதும் மேடையில் பேசிய எம்.எம், கீரவாணி, ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “ கார்பெண்டர்ஸ் என்ற அமெரிக்க இசைக்குழுவின் பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இந்த வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது” என தெரிவித்தார். 


முன்னதாக இப்பாடலுக்கு விழா மேடையில் நடன கலைஞர்கள் நடனமாடினர்.  பாடல் முடிந்தவுடன் விழாவிற்கு வந்த அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்று கைத்தட்டி தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தினர்.