சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்ற அனாடமி ஆஃப் எ ஃபால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்கர் 2024


திரைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த மார்ச் 11ஆம் தேதி நடந்து முடிந்தது. பல்வேறு பிரிவுகளின் கீழ் திரைப்படங்களுக்கும் திரைக்கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இயக்குநருக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் படத்தை இயக்கிய கிறிஸ்டொஃபர் நோலன் வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை கிலியன் மர்ஃபியும், சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோனும் வென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைக்கதைக்கான விருதை அனாடமி ஆஃப் எ ஃபால் படம் வென்றது. 


அனாடமி ஆஃப் எ ஃபால்’ (The Anatomy of Fall)


ஜஸ்டின் ட்ரியட் (Justine Triet) என்பவர் இயக்கத்தில் உருவான படம்  ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy of a Fall) . கேன்ஸ் 2023 விழாவில் மிக உயரிய ’Palme d'Or ‘விருதை வென்ற இப்படம், ஆஸ்கரில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆகிய ஐந்து பிரிவுகளில் நாமினேட் ஆகியது.


இதில் சிறந்த திரைக்கதைக்காக இப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சில திரையரங்குகளில் மட்டும் இப்படம் வெளியாகியது. மேலும் சென்னையில் இப்படம் ஒரு சில திரையரங்கில் குறைந்த காலத்திற்கு திரையிடப்பட்டது.


பொதுவாக ஆஸ்கரில் விருது வழங்கும் படங்களைப் பார்ப்பதற்கு என ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. ஒரு சில படங்கள் ஏற்கெனவே நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் முபி உள்ளிட்ட தளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது இப்படமும் ஓடிடி ரீலீஸ் பெறுவது அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.  இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி 2024 முதல் ஹூலு மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.


படத்தின் கதை


மலைகள் சூழந்த ஒரு பனிப்பிரதேசத்தில் வாழும் ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களின் 11 வயது பார்வையற்ற மகனை மையப்படுத்தியது படத்தின் கதை. பார்வையற்ற மகன் தனது தந்தையின் இறந்த உடலைக் கண்டுபிடிக்கிறான். இதனைத் தொடர்ந்து தனது சொந்த கணவரை கொன்றதாக அந்தப் பெண் காவல்துறையால் சந்தேகிக்கப்படுகிறார். உண்மையின் நடந்தது என்ன என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வருவது தான் படத்தின் மீதிக்கதை.