95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவதார் படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்துக்கு சிறந்த Visual Effects பிரிவில் விருது கிடைத்துள்ளது. 


ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  இன்று நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் நிலையில் அவதார் படத்தின் 2 ஆம் பாகமான “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” படம் சிறந்த படம் , சிறந்த காட்சியமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒலி ஆகிய பிரிவுகளில் போட்டியிட்டது. இதில் சிறந்த காட்சியமைப்பு (Visual Effects) பிரிவில் விருதை வென்றுள்ளது. 


ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படத்தின் முதல் பாகம்  கடந்த 2009 ஆண்டு வெளியானது. கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் பார்வையாளர்களுக்கும் நல்ல அனுபவமாக அமைந்தது. 


இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில்  அவதார் 2 படம் வெளியாகியிருந்தது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தி கதை அமைக்கப்பட்டிருந்தது. பண்டோரா உலகின் மக்களுக்கு தன்னால் ஆபத்து நேருகிறது என்பதை அறியும் ஹீரோ ஜேக் சல்லி, தன்னுடைய குடும்பத்தினரோடு கடல்வாசிகள் வாழும் நவி உலகத்தில் தஞ்சமடைகிறார். அவர்களுக்கு வில்லனான கர்னலால் என்ன ஆபத்து நேருகிறது என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.