மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விநாயகன் . தமிழில் திருரு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஒருத்தி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைப்பெற்றது. அதில் கலந்துக்கொண்ட விநாயகன் me too குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக பெண் பத்திரிக்கையாளரை நோக்கி நான் அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் நேரடியாக கேட்பேன் என்றதும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் விநாயகன்.
ஒருத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது, பெண்கள் முன்வைக்கும் `மீ டூ' குற்றச்சாட்டு குறித்து உங்களின் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் விநாயகன், ``me too என்றால் என்ன? திருமணத்துக்கு முன் யாரும் பாலியல் உறவில் ஈடுபடவில்லையா? இங்குள்ள யாராவது திருமணத்துக்கு முன் செக்ஸில் ஈடுபடாமல் இருந்திருக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்ப, பத்திரிக்கையாளர் ஒருவர் நான் ஈடுபடவில்லை என பதிலளித்தார். அவரை “பொட்டன்”என தகாத வார்த்தைக்கொண்டு பேசிய விநாயகன், நான் திருமணத்திற்கு முன்பு 10 பெண்களிடம் பாலியல் உறவு வைத்துள்ளேன். அவர்களிடம் கேட்டுதான் ஒப்புதல் வாங்குவேன் என்றார் . மேலும் அங்கிருக்கும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை கைக்காட்டி , இவருடன் எனக்கு பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் நான் நேரடியாக கேட்பேன். இவர் முடியாது என சொல்லுவார். ஆனால் என்னுடன் பழகிய பெண்கள் அப்படி சொல்லவில்லையே என்றார். மீ டு விவகாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். அது என்னவென்றே தெரியவில்லை என்றும் கூறினார். இவரின் இத்தகைய கீழ்த்தனமான பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு கடும் கண்டங்கள் வலுத்தன, இந்த நிலையில் விநாயகன் தற்போது மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் ““அனைவருக்கும் வணக்கம். ‘ஒருத்தி’ விளம்பர நிகழ்ச்சியின் போது, ஊடகவியலாளர் ஒருவரை(சகோதரி என குறிப்பிட்டிருக்கிறார்) நோக்கி தகாத மொழியில் பேசிவிட்டேன். இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல. என்றாலும் கூட அன்றைய தினம் நான் கூறிய கருத்துக்கள் அவருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். “ என தெரிவித்துள்ளார்.