திட்டம் இரண்டு திரைப்படம் வெளியாகி இன்றோடு ஓர் ஆண்டு நிறைவடைகிறது இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்த படமாக விளங்குகிறது. ஏனென்றால், அனைவரும் பேச தயங்கும் ஒரு தலைப்பான எல்.ஜி.பி.டி (L.G.B.T) சமுகத்தினரை பற்றியும் அவர்களின் மனநிலை பற்றியும் இந்த படம் தெளிவாக பேசி இருந்தது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் (அதிரா ), சுபாஷ் செல்வம் (அர்ஜுன்), அனன்யா ராம (தீபசூர்யா),பிரசாத் கோகுல் ஆனந்த் (கிஷோர்) மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கு இது இரண்டாவது படம் ஆனால் கதை மற்றும் திரைக்கதையை பார்க்கும்பொழுது அப்படி ஒரு தெளிவு இருக்கும் . இந்த கதையை பொறுத்தவரை ஒரு மெல்லிய கோட்டின் மேல் நடப்பது போல் இந்த பக்கமும் போய்விடாமல் அந்தப் பக்கமும் போய் விடாமல் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பை எடுத்து மிகவும் நேர்த்தியாக படமாக்கி இருப்பார்.
பட துவக்கத்திலிருந்து இறுதிவரை க்ரைம் திரில்லர் போலவே நகர்ந்து கடைசியில் ஒரு சமூக கருத்து திரைப்படமாக மாறும் . தன் உயிர் தோழி தீபசூரியா தான் அர்ஜுனாக மாறி இருக்கிறாள் என்பது அதிராவிற்கு தெரியவரும் தருணம் மிகவும் அருமையாக காட்சி படுத்தபட்டிருக்கும்.
படத்தின் இறுதிக்காட்சியில், பிறப்பால் ஒரு பெண்ணாக இருக்கும் தீபசூரியா, அவள் இளமை காலதில் இருந்து எவ்வளவு மனஅழுத்தத்தில் இருக்கிறாள் என்பதை பார்க்கும்பொழுது எல்.ஜி.பி.டி (L.G.B.T) சமுகத்தினர் தங்களை தங்களாக வெளிப்படுத்திக்கொள்ள எவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர முடியும்.
படத்தின் ஒரு காட்சியில் தீப சூர்யாவிற்கு திருமணம் ஆன பிறகு அவளது மடிக்கணினியை காட்டும் அதில் ஒரு கிளி கூண்டுக்குள் இருப்பது போல இருக்கும் அந்த புகைப்படம் தீபசூர்யாவின் அப்போதைய மனநிலையை விவரித்திருக்கும் இதுபோல குறியீடு காட்சிகள் படம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.
தன்னை அறியாமல் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிப்போன ஒரு சமூகத்தினர்தான் எல்.ஜி.பி.டி சமூகத்தினர். எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கும் படங்கள் தமிழில் மிகமிகக் குறைவு. அந்த விதத்தில் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக முத்திரைக்குத்தி வைக்கப்பட்டிருக்கும் எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் வலிகளை வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தே ஆக வேண்டும். இது போன்ற படங்கள் சமூகத்தில் மாற்றம் பிறக்க ஒரு கருவியாக இருக்கும். எல்.ஜி.பி.டி மக்களின் பிரச்சனைக்கான காரணம் அவர்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம் அதற்கான தீர்வு இந்த சமூகத்தினரின் மனதில் ஏற்பட வேண்டிய மாற்றம்.