தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய இயக்குநர் எனப் பெயர் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் பகாசூரன். இந்தப் படம் வெளியானபோது பல்வேறு தரப்பில் இருந்து மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகின்றது. 


குறிப்பாக, டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில் பழைய பெருசுகள் உளருவதைப் போல “எல்லாப் பிரச்சனையும் இந்த போனாலதான் வருது” என்று கூறும் கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.


பெண்கள், வீடியோ காலில் தங்களது காதலரிடம் அந்தரங்கமாக பேசுவதையும், காதலருடன் முத்தத்தை பரிமாறிக்கொள்வதையும் கூட, “தப்பு தப்பு தல மேல கொட்டு” என்பதைப் போல படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.  



“எல்லா காட்சியிலும், பெண்கள் நம்பி ஒருவனிடம் தங்களின் உடலைக் காட்டுவதையும், முத்தம் கொடுப்பதையும் குறை சொல்கிறார்களே அன்றி, அவர்கள் குறித்து வீடியோ வெளியிடும் நபர்களை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனால் வரும் பிரச்சனைகளை கூறிவிட்டு அதை கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசியிருந்தால் இயக்குனரைப் பாராட்டலாம். ஆனால், வெகுஜன மக்களின், “எல்லாமே மொபைல் போனாலதான்” என்ற கருத்தையே இந்த படத்திலும் திணிக்க முயற்சித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. பெண்களை பாலியல் தொழிலில் எப்படி சிக்கவைக்கின்றனர் என்று கூறிய விதத்தை மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம். மொத்தத்தில் செல்வராகவனுக்காக வேண்டுமானால் பகாசூரனைப் பார்க்கலாம், மற்றபடி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை” என படம் வெளியான கடந்த ஆண்டு தனது ரிவ்யூவில் ஏபிபி நாடு கூறி இருந்தது. 


இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகும் நிலையில், படத்தின் இயக்குநர் மோகன் ஜி படத்தில் நடித்த இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜன் மற்றும் படத்திற்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஆகியோருக்கும் படத்திற்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.