சமகாலத்தில் மொழிகள் கடந்து உயர்ந்து நிற்கும் மகாநடிகர் பஹத் பாசில் என்று சொன்னால் அது நிச்சயமாக மிகை மொழி அல்ல.


இயக்குநர் பாசிலின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுக்கு இன்று வயது 39. பிரபல இயக்குநர் பாசிலின் மகனான பஹத் பாசில் 2002-ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் அறிமுகமானார். முதல் படம், விமர்சன ரீதியாகவும் தோல்வி, வசூல் ரீதியாகவும் படு தோல்வி. அதன் பின்னர் 7 வருடங்கள் பிரேக் எடுத்துக்கொண்ட பஹத் திரும்பிவரும்போது நடிப்பு ராட்சசனாகத் தான் அடியெடுத்துவைத்தார். அன்று தொடங்கி இன்றுவரை சவால் நிறைந்த பாத்திரங்களைக் கூட சாதாரணமாக நடித்துவிடுகிறார்.  ஒரு படத்தில் அவரது நடிப்பை வியந்து நாம் கொண்டாடி முடிப்பதற்குள்ளதாகவே அடுத்த படத்தில் இது இன்னும் சூப்பராக இருக்கிறதே என்று வியக்க வைக்கும் திறமைசாலி.


அப்பேற்பட்ட நடிகர், தனது நடிப்பின் ரகசியம் பற்றியும் சிறந்த நடிகராக மிளிர 7 ஆலோசனைகளையும் கூறியுள்ளார்.


இதோ ஃபஹத்தின் 7 மந்திரங்கள்..


1. ஒரிஜினாலிட்டியை விட்டுவிடாதீர்கள்..


நடிக்க வரும் அனைவருக்குமே இவர் தான் எனது ரோல் மாடல் என்று ஒருவர் இருக்கத்தான் செய்வார். எனது நடிப்பு குரு இர்ஃபான் கான். பாலிவுட் நடிகர் இர்பான் கானின் நடிப்பைக் கண்டு வியந்து அமெரிக்காவில் தான் மேற்கொண்டிருந்த பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு வந்து நடிக்க ஆரம்பித்தேன். அவரிடமிருந்து தான் நான் எனது நடிப்புக்கான ஊக்கமும், உத்வேகமும் பெறுகிறேன். நீங்கள் யாரை ரோல் மாடலாகக் கொண்டாலும் சரி உங்களுடைய ஒரிஜினாலிட்டியை தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.


2. நம்பிக்கை முக்கியம்:


நீங்கள் கையில் எடுக்கும் வேலையின் மீது நம்பிக்கை வையுங்கள். சில நேரங்களில் பொதுவெளியில் பிரபலமாக இருப்பதை நாமும் பின்பற்ற முற்படுவோம். அது தவறு. நான் எப்போதுமே எனக்கு திருப்தியில்லாத கதைகளை, எனக்கே நம்பிக்கை ஏற்படாத கதைகளைத் தேர்வு செய்ய மாட்டேன். இதனால் நான் 50 பட வாய்ப்புகளை இழந்திருக்கலாம். ஆனால், நான் இழந்த அந்த 50 பட வாய்ப்புகள் தான் என்னை இன்னும் இன்டஸ்ட்ரியில் தக்க வைத்துள்ளது.


3.ஒரு காட்சியில் லயிக்க இசை உதவும்..


ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஹீத் லெட்ஜர் ஒவ்வொரு முறை தான் உணர்வுப்பூர்வமாக காட்சியின் நடிக்கும் முன்னரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாம்பே திரைப்பட தீம் மியூஸிக்கைக் கேட்பாராம். அது போல் எனக்கும் சில பிடித்தமான இசை உள்ளன. அழுத்தமான காட்சிகளில் நடிக்கும் முன்னர் அந்தக் காட்சிக்கு ஏற்ப மனநிலையை மாற்ற எனக்குப் பிடித்த இசையைக் கேட்பேன்.


4.இன்று..இப்போது.. அதில் கவனம் செலுத்தங்கள்


நான் எப்போதும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டம் என்றெல்லாம் தொலைநோக்குப் பார்வை கொள்வதில்லை. இன்று, இந்த நொடியில் என்னிடம் உள்ள வாய்ப்பில் எனது திறமையை வெளிப்படுத்துவது எப்படி என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கிறேன். ஒருவேளை இப்படி நடந்தால், அப்படி நடக்காவிட்டால் என்ற எண்ண ஓட்டம் என்னிடம் எப்போதுமே இருக்காது. 


5.பஹத் இன்ஸ்டின்க்ட்..


நம் அனைவருக்குமே சில நேரங்களில் உள்ளணர்வு சில விஷயங்களை உணர்த்தும். இதை செய்யவேண்டாம் என உள்ளுணர்வு சொல்லும். ஆனால், நாம் அதையும் மீறி சில விஷயங்களைச் செய்வோம். அப்படிச் செய்வது சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், நான் ஒரு போதும் எனது உள்ளுணர்வை மீறிச் செயல்படுவதில்லை. பஹத் இன்ஸ்டின்க்ட் எப்போதும் பக்காவாக ஒர்க் அவுட் ஆகும். நீங்களும் உங்களின் உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள்.


6.நன்றி மறப்பது நன்றன்று..


உங்களின் ரசிகர்களை எப்போதும் லேசாக எடை போடாதீர்கள். அவர்கள் உங்களை ரசிக்கிறார்கள் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்காதீர்கள். ரசிகர்கள் இல்லாமல் நாம் ஒன்றுமில்லை. எனது ஒவ்வொரு சோதனை முயற்சியையும் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருக்கிறேன். அவர்களை மனதில் கொண்டு தான் கதைத் தேர்வுகளை செய்கிறேன்.


இதையும் படிங்க : ’மலையாள சினிமாவின் மகேந்திர பாகுபலி..உலகநாயகனின் கனவுநாயகன்..' : ஹேப்பி பர்த்டே ஃபாஃபா..!


7.ஊக்கத்தின் அடையாளமாக மாற முற்படுங்கள்..

நமது வெற்றிப் பயணத்தில் நமக்குப் பலரும் முன்மாதிரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று நாம் தேர்வு செய்யும் கதைகளாலும், கதாபாத்திரங்களாலும் எதிர்காலத்தில் நான் மற்றவர்களுக்கு ஊக்கத்தின் அடையாளமாக இருக்க விரும்புகிறேன். நீங்களும் அவ்வாறாக ஊக்கத்தின் அடையாளமாக மாற முற்படுங்கள்.


பஹத் பாசில் சொல்லும் ஆலோசனைகளில் சில வாழ்க்கையில் அனைவருக்குமே உதவக்கூடியது தான்.