நடிகர் யாஷ் நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'கேஜிஎஃப் 2' திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேஜிஎஃப் 3 படத்தின் ஹிண்ட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது கேஜிஎஃப் படக்குழு. 


 



கேஜிஎஃப் 3 அப்டேட் :


தென்னிந்திய சினிமாவின் தலைவிதியை மாற்றியதில் கேஜிஎஃப் 2 படத்திற்கு பெரும் பங்கு உண்டு. கடந்த ஆண்டு அப்படம் வெளியான நாள் முதல் அடுத்த பாகத்திற்கான அப்டேட் குறித்த அறிவிப்பிற்காக  ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த அப்டேட்டை தற்போது தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளது கேஜிஎஃப் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ். "1978-1981 வரை ராக்கி எங்கே இருந்தார்?" இது தான் அவர்கள் வெளியிட்டுள்ள அடுத்த பாகத்திற்கான ஹிண்ட். 



ஹோம்பலே ஃபிலிம்ஸ் ட்வீட் செய்ததில் 'மிகவும் சக்தி வாய்ந்த மனிதன் கொடுத்த வாக்குறுதி. கேஜிஎஃப் 2 படத்தின் கதாபாத்திரங்களும், ஆக்ஷன் காட்சிகளும் மறக்க முடியாதவை. உலகளவில் கொண்டாடப்பட்டு பல சாதனைகளை முறியடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த திரைப்படம். இதோ வேறு ஒரு கதை சொல்ல தயாரானது...' மேலும் அதனுடன் ஒரு 37 செகண்ட்  வீடியோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்கள். 


 






 


சாதனை படைத்த கேஜிஎஃப் 2 :


பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை செய்து சுமார் 1200 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் மற்றும் சரண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.


கேஜிஎஃப் 3 எப்போ ஸ்டார்ட் :


தற்போது கேஜிஎஃப் 2 இயக்குனர் பிரஷாந்த் நீல், நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில்  பிஸியாக இருந்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அப்படத்தின் பணிகளை முடித்த பிறகு 2025ல்   தான் கேஜிஎஃப் 3 படத்தின் பணிகள் துவங்கும் என்றும் 2026ல் தான் வெளியாகும் என்றும்  கூறப்படுகிறது.