நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல் நடிப்பில் ஆர்வம் காட்டாததால், தந்தை வழியில்லாமல் தாத்தாவின் வழியை பின்பற்றுவதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், த்ரிஷா என பலரும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.  லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்க உள்ள படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இந்த நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனில் திரைக்கதை எழுதுவது குறித்து படித்து வந்த ஜேசன் சஞ்சய், குறும்படங்களை இயக்கியுள்ளார். விஜய் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பதால், அவரை போல் விஜய் மகனான ஜேசன் சஞ்சயும் ஹீரோவாக அறிமுகமாவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். சஞ்சயை ஹீரோவாக அறிமுகப்படுத்தவும் சுதா கொங்கரா உள்ளிட்ட இயக்குநர்கள் விஜய்யை அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால், சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜேசன் சஞ்சய் முதலில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனன், ஜேசன் விஜய் சொன்ன கதை சுவாரசியமாக இருந்ததாகவும், அவர் இயக்க இருக்கும் படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.


தந்தை நடிகராகவும், தத்தா மிகப்பெரிய இயக்குநராகவும் இருப்பதால் சினிமா மீது ஜேசன் சஞ்சய்க்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், தந்தையை போல் நடிப்பதை தேர்வு செய்யாமல், தாத்தா  எஸ்.ஏ.சந்திரசேகரை போல் இயக்குநராக ஜேசன் சஞ்சய் திரையுலகின் தன்னை அறிமுகப்படுத்த உள்ளார். 






நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர் 1978ம் ஆண்டு வெளிவந்த ’அவள் ஒரு பச்சை குழந்தை’ என்ற  படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வசனம், வித்யாசமான காட்சிகள் மூலம் மிகப்பெரிய இயக்குநராக எஸ்.ஏ. சந்திரசேகர் உருவெடுத்தார். தற்போது தாத்தாவை போல் இயக்குனராக அதுவும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் இணைந்திருக்கும் ஜேசன் சஞ்சய் எந்த மாதிரியான படைப்பை தமிழ் சினிமாவுக்கு தருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.