பிரபல பாலிவுட் நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா இருவரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


1997 ஆம் ஆண்டு அக்னிசக்ரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ராக்கி சாவந்த் ஜோரு கா குலாம், ஜிஸ் தேஷ் மே கங்கா ரெஹ்தா ஹைன், மஸ்தி, மைன் ஹூன் நா, ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா மற்றும் தில் போலே ஹடிப்பா உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களிலும், பாடல் காட்சியிலும் நடித்து பிரபலமானார். ஹிமேஷ் ரேஷ்மயா இசையமைத்த மொஹபத் ஹை மிர்ச்சி ராக்கிக்கும் மேலும் புகழை சேர்த்தது. 


இதனிடையே சில மாதங்களுக்கு ரன்வீர்சிங் நிர்வாணமாக வெளியிட்ட புகைப்படம் கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ராக்கி ரன்வீருக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன்களில் களம் கண்டுள்ளார்.  






ஷெர்லின் சோப்ரா  கடந்த காலத்தில் இந்தி பட தயாரிப்பாளர் சஜித் கான் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது  பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக ராக்கி பேசியதாக கூறி நவம்பர் 6 ஆம் தேதி அவரை விமர்சித்து ஷெர்லின் சோப்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னைப் பற்றி தவறான வார்த்தைகளை பயன்படுத்தி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி ராக்கி சாவந்த் மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில் ஷெர்லின் சோப்ரா மீது  புகாரளித்தார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, ஷெர்லினின் பேச்சுக்களால் தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், அவர் சொன்னது போல எனக்கு 10 காதலர்களா இருக்கிறார்கள்?. அவர் சொன்னதை கேட்டு என் காதலன் என்னை சந்தித்தபோது கேள்வி எழுப்பினார். ஷெர்லின் கூறியதற்கான பலனை நான் அனுபவிக்கிறேன் என ராக்கி தெரிவித்திருந்தார். 


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னைப் பற்றி அவதூறு ஏற்படும் வகையிலான வீடியோவை வெளியிட்டு உள்ளதாக கூறி ராக்கி சாவந்த் மற்றும் அவரது வழக்கறிஞர் மீது ஷெர்லின் சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.