ராமாயண கதையில் வரும் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் ஓம் ராவத்.


ஆதிபுருஷ்:


இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ஜூன் 16ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தின் பாகுபலி புகழ் பிரபாஸ் ராமராக நடிக்க கிருத்தி சனோன் சீதையாக நடித்துள்ளார். இந்த நேரத்தில் சினிமாவில் இதுவரையில் ராமராக நடித்த நடிகர்கள் குறித்து பார்க்கலாம். 


 




என்.டி. ராமராவ் :  


தென்னிந்திய சினிமாவில் ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றவுடன் உடனே நினைவுக்கு வரும் ஒரு நடிகர் என்.டி. ராமராவ். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். ராமருக்கு உரித்தான முகபாவங்கள், உணர்ச்சி, குணாதிசயங்கள் என அனைத்தையும் அப்படியே வெளிக்காட்டக்கூடியவர். திரை ரசிகர்களை  பொறுத்தவரையில் ராமருக்கு நடிப்பால் உயிர் கொடுத்தவர். ராமாயணம் சார்ந்த பல படங்களில் ராமராக நடித்த பெருமை என்.டி.ஆரையே சேரும். 


நந்தமூரி பாலகிருஷ்ணா :


தந்தையின் வழியே மகன் பாலகிருஷ்ணாவும் ராமராக 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் மூலம் அவர் புராண கதைகளில் அறிமுகமானார். தந்தை என்.டி. ராமராவுக்கு கிடைத்த அதே வரவேற்பு பாலகிருஷ்ணாவுக்கும் கொடுத்தனர் ரசிகர்கள். 


ரவிக்குமார்:


மூத்த இயக்குநர் பாபு தயாரிப்பில் வெளியான 'சீதாகல்யாணம்' திரைப்படத்தில் ரவிக்குமார் ராமராகவும், ஜெயப்பிரதா ஜானகியாகவும் நடித்திருந்தனர். 


ஜூனியர் என்.டி.ஆர் : 


ராமாயணத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே நடித்த படம் 'பால ராமாயணம்'. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராமராக நடித்திருந்தார்.


 



 


ராம் சரண் :


எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஆஸ்கார் விருதை கைப்பற்றிய 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடிகர் ராம் சரண் ராமராக நடித்திருந்தார். அப்படத்தில் ராம் சரண்  ராமராக நடித்ததற்கு மற்ற மதத்தை சேர்ந்த பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். அப்படத்தில் ராமச்சரன் ராமராக உருவெடுத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவது போல அமைந்து இருந்தது. 


சிவகார்த்திகேயன் :


'சீமராஜா' படத்தில் நடிகை சமந்தாவை சந்திப்பதற்காக ராமர் வேஷம் போட்டு நடித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். 


விஷால் :


நடிகர் விஷால் ஹீரோயின் ஸ்ரேயாவை ஏமாற்றுவதற்காக ராமர் போல வேஷம் போட்டு இருப்பார். அவருடன் சந்தானம் அனுமார் வேடத்தில் கலக்கலாக இருப்பார்.