நடிகை மீனாவும் ராதிகாவும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரஜினியை குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிப்படங்களிலும் கலக்கியவர்கள் ராதிகா, மீனா. நடிகை ராதிகா 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் முதல் ஹீரோயினாக அறிமுகமானர். அதேபோல மீனாவும், 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ந் தேதி வெளிவந்த ஒரு புதிய கதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயிலே திரைப்படத்தில், மாநிறத்தில், தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி அனைவரையும் வசியம் செய்தார் ராதிகா.


இன்று வரை இவர் நடித்த அந்த பாஞ்சாலி கதாபாத்திரம் பேசும் பொருளாகவே உள்ளது. நடிகர் சுதாகருடன் இவர் நடித்த இந்த படம் வெற்றி பெற்று ஹிட்டடித்து ராதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. முதல் படமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகையாக மாறிய ராதிகாவுக்கு பல படவாய்ப்புகள் வந்தன. நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவர் அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன.


ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையை ராதிகா நிகழ்த்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான கிழக்குசீமையிலே இன்னோரு பாச மலர் என்றே கூறப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாசமிகு தங்கையாகவும், அமைதியான மனைவியாகவும், பாசம், கோபம் என அனைத்தை காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருப்பார். இந்த படம் வெற்றி பெற்று இவரின் ரேஞ்சை மேலும் ஏற்றிவிட்டது.



இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றியடைய தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் வரை தனது கொடியை நாட்டி அதை விசாலமாக பறக்கவும் விட்டுள்ளார் ராதிகா. இவர் சமீபத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களுக்கான ஒரு க்ரோர்பதி நிகழ்ச்சியாக இருந்தது. அதில் போட்டியாளராக நடிகை மீனா கலந்து கொள்ளும்போது பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.


நடிகை மீனா என்றதுமே கொஞ்சும் தமிழும், குழந்தை சிரிப்பும், குறும்புத்தனமான நடிப்பும்தான் பலருக்கும் முதலில் நினைவில் வரும். 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'முத்து', 'எஜமான்', 'ரிதம்', 'அவ்வை ஷண்முகி', 'த்ரிஷ்யம்' என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மீனாவும் ராதிகாவும் இணைந்த இந்த நிகழ்ச்சியில் பேசி பேசி ரஜினியின் டாப்பிக்கை எட்டிவிட்டனர். அப்போது ரஜினி சாரை எப்படி கூப்புடுவீங்க, அங்கிளா? சாரா? என்று ராதிகா கேட்டார். அப்போது மீனா சிரித்துவிட்டு, "முதலில் எனக்கு எப்படி கூப்பிடனும்ன்னு தெரியாம ரொம்ப கூச்சமா இருந்துச்சு. எஜமான் படத்தோட முதல் ஷெட்யூல் முழுக்க நான் அவரோட பேசவே இல்லை, இந்த ஒரே காரணத்துக்காக. அவர் அப்பாவிடம் போய்'என்னங்க… எனக்கு ஏதோ மாதிரி இருக்கு' என்றெல்லாம் கூச்சப்பட்டு சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் ரொம்ப ஸ்வீட், அதுக்கு அப்புறம் என்ன அழவைக்குற அளவுக்கெல்லாம் கலாய்ச்சுருக்கார்." என்று கூறினார்.



அதற்கு ராதிகா, "ஆமாம், அவரு பயப்புடற ஒரே ஆளு நான்தான், நான்தான் அவரை அழ வைப்பேன். அவர் என்ன பாத்ததும் ராதிகா, என்ன விட்டுடு ன்னு ஒதுங்கி ஓடுவாரு. ஆனா நெறைய பேர் அவரை ரொம்ப சீரியஸ்ன்னு நெனச்சுட்டு இருக்காங்க. அவரு ரொம்ப ஜாலி டைப். போக்கிரி ராஜா திரைப்படத்தில் நடிக்கும்போது, நான், அவரு, ஸ்ரீதேவி மூணு பேரும் 2,3 மணி வரைக்குமெல்லாம் ஷூட்டிங்ல இருப்போம், ஆனா நேரம் போறதே தெரியாது, அவர் அப்படி கலாய்ப்பாரு. ஒரு நாள் ஒரு பாம்பை கைல பிடிச்சு ஸ்ரீதேவியையும் என்னையும் பயமுறுத்தினாரு, ஸ்ரீதேவி அழுதிட்டாங்க. ஆனால் இப்போ ரொம்ப மாறிட்டார், அந்த ரஜினிய ரொம்ப மிஸ் பண்றோம்" என்றார், அதனை அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த மீனாவும் ஆமோதித்தார். மீனா அன்புள்ள ராஜினிகாந்த் திரைப்படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக துள்ளிக்குதித்து ரஜினி அங்கிள்… என்று பாசம் பொங்க அழைக்கும் மீனாவின் மழலைக்குரலை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்கமுடியாது.


அதன் பிறகு எஜமான் திரைப்படத்தில் வளர்ந்ததும் ஜோடியாக நடித்தார். அதிலும் காம்பினேஷன் வெற்றிபெற வரிசையாக நிறைய படங்கள் ரஜினிக்கு இணையாக நடித்தார், இப்போது கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார். துறுதுறுப்பான செய்கையாளும் அழகாளும் சிவாஜியின் கண்களை ஈர்த்த மீனா, மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் புதிய கதை படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமாகி கொடிகட்டி பறந்தார் மீனா. ராஜ்கிரணுடன் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மீனா. ரஜினிகாந்துடன் முத்து, வீரா போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். கமல், விஜய்காந்த், சரத்குமார், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இன்றுவரை மறக்க முடியாத இடத்தை பெற்றுள்ளார்.