வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மாநாடு. இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படம் முதலில் அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு களமிறங்க தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.  


ஆனால் அன்றைய தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் படம் வெளியானது. படம் தற்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. 




குறிப்பாக டைம் லூப்பை வைத்து இவ்வளவு நேர்த்தியான திரைக்கதையை அமைத்தற்காக வெங்கட் பிரபுவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சிலம்பரசனுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு மாநாடு படம் ஒரு சிறப்பான வெற்றியை கொடுத்திருக்கிறது. படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் என்றால் அது எஸ்.ஜே.சூர்யா. சிம்புவின் டைம் லூப்பால் பாதிக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தும் காமெடி கலந்த வில்லத்தனமான நடிப்பு  தியேட்டரில் அப்லாஸை அள்ளுகிறது.


இன்னும் சொல்லப் போனால் தற்போது சமூகவலைதளங்கள் சிம்புவின் நடிப்பை விட, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையே அதிகம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் அரவிந்த்சாமிதான். ஆனால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே சில பிரச்னைகளால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


 


இதனால் அரவிந்த் சாமி அடுத்தடுத்த படங்களில் நடிக்க


தன்னை ஒப்பந்தம் செய்தார். இதனையடுத்து பிரச்னை சரிசெய்யப்பட்டு மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் அரவிந்த் சாமியின் கால்ஷீட் பிரச்னை இடையூறாக வந்துள்ளது. இதனால் அந்தக் கதாபாத்திரத்தில் வேறு நடிகரை நடிக்க வைக்க பல நடிகர்களை தேடியுள்ளார் வெங்கட் பிரபு.. இந்த நேரத்தில்தான் படத்தின் இணை இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவை நடிக்க வைத்தால் என்ன என கேட்க, படத்திற்குள் எஸ்.ஜே.சூர்யா வந்துள்ளார். ஆனால் உண்மையில் அரவிந்த்சாமி இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால், இந்தளவு படம் கொண்டாடப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.