தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் சிவசங்கர் மாஸ்டரும் ஒருவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் அதிகமான படங்களுக்கு நடன காட்சிகள் அமைத்தவர்.
குறிப்பாக தமிழ் சினிமாவில் பல பெரிய ஹீரோக்களை ஆட்டுவித்தவர் சிவசங்கர் மாஸ்டர். அஜித்திற்கு நடனம் பெரிதாக வராது என விமர்சனங்கள் எழுந்த காலக்கட்டத்தில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்தார்.
பரதநாட்டிய கலைஞராக நடித்த அஜித் சிவசங்கர் மாஸ்டரின் கோரியோவால் பரதநாட்டியத்தை அருமையாக ஆடியிருப்பார். அதேபோல் திருடா திருடி படத்தில் இடம்பெற்ற புகழடைந்த பாடலான மன்மத ராசா பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர்தான் நடனம் அமைத்தார். அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த நடன அசைவுகளும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
அதுமட்டுமின்றி இவர் தீரா தீரா தீரா பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். நடன அமைப்பு மட்டுமின்றி சிவசங்கர் மாஸ்டர், வரலாறு, ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரது மனைவி மற்றும் மூத்த மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து சிகிச்சைக்கு உதவ கோரி அவரது மகன் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி சோனு சூட் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவரும் சிவசங்கர் மாஸ்டருக்கு நடிகர் தனுஷ் பெரும் தொகையை கொடுத்து உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகை அவரது குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: லீவு.. லீவு.. மிரட்டும் மழையால் இந்த மாவட்டத்துக்கெல்லாம் இன்று விடுமுறை..!
மாநாடு பார்த்துவிட்டு தயாரிப்பாளருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார்! இது ரஜினியின் ரிவியூ.!