முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் ஹீரோக்கள் ஒரு சிலரை. அந்த வகையில் 2002 -ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான, ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ஒரு சில விருதுகளையும் பெற்றார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படமும், விமர்சன ரீதியாகவும்... வசூல் ரீதியாகவும்.. நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் பின்னர், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் கனவு, பம்பரக்கண்ணாலே, மெர்குரி பூக்கள், என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.
சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் தற்போது இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தினசரி, மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய படங்களும் படு மோசமான தோல்வியை சந்தித்தது.
தெலுங்கிலும் இறைச்சீரா என்கிற படம் மட்டுமே ஸ்ரீகாந்த் கைவசம் உள்ளது. வெற்றி படத்தை கொடுக்க தொடர்ந்து போராடிவரும் நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதை மருந்து விவகாரத்தில் சிக்கி உள்ள சம்பவம் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது காவல் நிலையத்தில் போலீசார் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உறுதி செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிப்பட துவங்கி உள்ளது. கொக்கின் போதை பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியதை ஏற்கனவே பலமுறை பார்த்துள்ளதாக பிரசாந்த் காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே நடிகர் கிருஷ்ணாவிடமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தான் நடிகர் கிருஷ்ணா, தன்னுடைய நீண்ட நாள் தோழியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு கிராம் கொக்கேன் ரூபாய் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.