இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான ஹரிஹரன் இசை கச்சேரி ஒன்று சமீபத்தில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாண பகுதியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர், நடிகைகள் ரம்பா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சிகளில் குளறுபடியும் அதனால் ஏற்படும் சர்ச்சை என்பது சமீபகாலமாக அடிக்கடி நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது.


அந்த வகையில் பாடகர் ஹரிஹரனின் இந்த இசை நிகழ்ச்சியிலும் பல குளறுபடிகள் ஏற்பட்டன. விஐபி டிக்கெட் பெற்றவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கட்டணம் செலுத்தியவர்களின் இருக்கைகள் பக்கம் நுழைய துவங்கினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.




கூட்டநெரிசல் :


நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபலங்கள் மேடையில் கேட்டுக்கொண்ட போதும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இசை நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 35000 பார்வையாளர்களை எதிர்பார்த்த இடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலானோர் திரண்டதால் பிரச்சனை கை மீறி போனது. இந்த செய்தி சமூக வலைதளங்கள் எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு பேசு பொருளாக மாறியது.  


கலா மாஸ்டர் கொடுத்த விளக்கம் :


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த குளறுபடி பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கலா மாஸ்டர் பேசுகையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சரியாகத்தான் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானோர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் நுழைந்ததால்தான் சிக்கல் ஏற்பட்டது. அதனால் இசை நிகழ்ச்சி 20 நிமிடங்கள் தடைபட்டு பின்னர் சரி செய்யப்பட்டது என கலா மாஸ்டர் தெரிவித்து இருந்தார். நிகழ்ச்சி மொத்தமாக நிறுத்தப்பட்டது என சொல்லப்படுவது உண்மையான தகவல் அல்ல என அவர் சொன்ன பதிலுக்கு நேர்மாறாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


 



ஏற்பாடு நிறுவனத்தின் முடிவு :


இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட தடங்கல் மற்றும் குளறுபடி காரணமாக இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வருவாய் அனைத்தையும் திருப்பி செலுத்த முடிவு செய்துள்ளோம் என நிகழ்ச்சி ஏற்பாடு செய்த Northern Uni நிறுவனம் தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்வி செலவிற்கு அந்த பணத்தை கொடுக்க விரும்புவோரை தவிர்த்து பணத்தை திரும்பி பெற விரும்புவோர் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளனர்.