தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் 31வது பிறந்தநாள் இன்று. ஒரு மாடலாக இருந்த நிவேதா 'ஒரு நாள் கூத்து' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து மனசு தங்கம், டிக் டிக் டிக், மெண்டல் மனதில், திமிரு பிடிச்சவன், சித்ரலேகாரி, ஆலா வைகுந்தப்புராமுலு போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
மாடலிங் மீது இருந்த ஆர்வம் :
மதுரையில் பிறந்த இந்த மல்லிகைப்பூ பட்டம் பெற்றது இங்கிலாந்தின் எடின்பர்க் மாநகரத்தில். இடையில் துபாயில் குடியேறியது நிவேதா பெத்துராஜ் குடும்பம். அங்கும் மாடலிங்கில் ஈடுபட்ட நிவேதா 2015ம் ஆண்டுக்கான ஐக்கிய அமீரக மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாடலிங் மீது இருந்த ஈடுபாடு தான் அவரை சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஜெயம்ரவி நடிப்பில் வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில் ஒரு விண்வெளி வீராங்கனையாக ஒரு துணிச்சனான பெண்ணாக சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகளை குவித்தார் நிவேதா.
ஃபார்முலா கார் ரேஸ் பயிற்சி பெற்ற நிவேதா :
நிவேதா பெத்துராஜ் திரைப்படங்களிலும் மட்டும் துணிச்சலை காண்பிப்பவர் அல்ல நிஜ வாழ்விலும் மிகவும் துணிச்சலான ஒரு பெண்மணி என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அதற்கு உதாரணம் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஃபார்முலா கார் ரேஸ் பயிற்சியை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயது முதலே ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது இருந்த தீராத ஆசையால் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளார். ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது இருந்த ஆர்வம் மேலும் அதிகரிக்க 2015ம் ஆண்டு "Dodge Challenger" ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அரேபிய நாட்டிலேயே ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருந்த இரண்டாவது பெண் நிவேதா என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் எதிர்ப்பையும் மீறி மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஸ்போர்ட்ஸ் காரை டிரைவ் செய்து புதிய அனுபவத்தை அனுபவித்தார். அதற்கு பிறகும் ஆர்வம் குறையாமல் பெரிய கார் நிறுவனங்கள் பங்கேற்கும் துபாய் மோட்டார் ஷோகளில் பணிபுரிந்துள்ளார்.
அது நிவேதாவின் கார் மீதான வேட்கையை அதிகரிக்க கோயம்புத்தூரில் உள்ள ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங் பயிற்சியில் கலந்து கொண்டு ஆண்களுக்கு நிகராக ஓட்டி சாதனை படைத்தார் இந்த துணிச்சல் பெண்மணி நிவேதா பெத்துராஜ். நிவேதாவின் மிக பெரிய ஆசை என்னவென்றால் ஆண்களை போலவே பெண்களுக்கும் ஃபார்முலா ஒன் மற்றும் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக கலக்கி வரும் போது அவர்களுக்கும் இந்த கார் ரேஸிங் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது தான். இந்த ப்ரேவ் லேடிக்கு ஒன்ஸ் மோர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.