இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்ததாக இவர் மீது இன்னும் பல குற்றங்கள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியிருக்கிறார். தனி தீவை உருவாக்கியது மட்டுமில்லாமல் தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென அறிவித்து அதிரவைத்தார்.
இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலம் அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவும் நிகழ்த்துகிறார். இந்த வீடியோக்களும் ஏதோ காரணத்திற்காக வைரலாகிவிடும்.
அந்த வகையில், கைலாசா தீவு எங்கு உள்ளது என்பது குறித்தும், கைலாசாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் குறித்து நித்தியானந்தா சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். தற்போது அது இணையத்தில் வட்டமடித்து வருகிறது. அதில், கைலாசாவில் தன் சீடர்களுக்கு சிறந்தவைகளை மட்டுமே வழங்கி வருகிறோம். அனைத்து சீடர்களுக்கு தனி தனி அறைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், எனது அறையில் மட்டுமே கதவுகள் கூட கிடையாது. யாராவது நடந்து வந்து என்னிடம் எது குறித்தும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.
ஏனென்றால் எனக்கென்று அறைகள் எதுவும் இல்லை. நான் அறை எதுவும் விரும்பாமல் ஹாலில் தங்கி இருக்கின்றேன். இதுதான் எங்கள் கைலாசாவின் வடிவமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நான் ஹாலில் உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு ஒரு பக்கம் பனிபடர்ந்த மலையையும், மறுபக்கம் கடலையும் ரசித்து வருகிறேன். இப்படி நான் சொன்னவுடன் உடனே கூகுளில் பனிபடர்ந்த மலையும், கடலும் எங்கே இருக்கிறது என்று யாரும் தேடாதீர்கள் என்று காவல்துறையினரை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார்.
முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே உள்ள நித்தியானந்த ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள் நித்தியானந்தா கைலாச நாட்டில் இருந்தே சித்திரை திருவிழாவை காண்பதற்காக நேரலை வசதியை ஏற்படுத்தினார். மேலும் நித்தியானந்தாவின் தான் சித்திரை திருவிழாவை காண்பதனை நேரலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்களை வழங்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்