அன்று முதல் இன்று வரை பெரும்பாலான பெண்களுக்கு தாங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பது மிக பெரிய ஆசையாகவே இருக்கிறது. பெண் செய்தி வாசிப்பாளர்கள் தினசரி வெவ்வேறு புடவை மேட்சிங் பிளவுஸ், மேட்சிங் நகைகள் என அணிந்து வருவதை பார்த்து ரசிப்பதற்காகவே பல பெண்கள் தினசரியும் செய்திகளை மறக்காமல் பார்ப்பார்கள். 


பெண் நட்சத்திர செய்தி வாசிப்பாளர்கள்:


திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமில்லை, பாத்திமா பாபு, ஷோபனா ரவி, சந்தியா, ரத்னா என ஏராளமான பெண்  செய்தி வாசிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வரிசையில் 'வணக்கம்' என்பதையே இடி முழக்கம் மாதிரி உச்சரித்து ஒரு ட்ரெண்ட் செட் செய்தவர் நிர்மலா பெரியசாமி. அவ்வளவு எளிதில் இவரை யாராலும் மறந்து விட முடியாது.


அவரின் கணீர் குரல் வளம், நேர்த்தியான தெளிவான உச்சரிப்பு தான் ஸ்பெஷல். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நியூஸ் ரீடராக வலம் வந்தவர். செய்திகள் பார்க்க வேண்டும் என விரும்பும்  ஆண்களுக்கு மத்தியில் நிர்மலா பெரியசாமி என்ட்ரிக்கு பிறகு பெண்களும் செய்திகளை தவறாமல் பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் வந்ததற்கு முக்கியமான காரணம் நிர்மலா பெரியசாமி. 


 



 


கோடை இடி:


எளிமையான வசீகரமான தோற்றம் கொண்ட நிர்மலா பெரியசாமி உடையில் எது செய்தாலும் அது ட்ரெண்ட்டாகிவிடும். இது ரசிகர்கள் அவருக்கு கொடுத்த மிகப்பெரிய அன்பு பரிசு என்றே கூறலாம். செய்தி வாசிப்பாளாக நிர்மலா பெரியசாமி எப்படி என்ட்ரி கொடுத்தார் என்பதை பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். 


சிறு வயது முதலே அப்பாவும் அவரின் நண்பரும் அரசியல் குறித்த விவாதங்களை பேசும் போது அதை கேட்க துவங்கியாதல் அது மனதில் மிகவும் ஆழமாக  பதிந்து போனது. நான்காம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுடன் சேர்ந்து அரசியலை விவாதிக்கும் அளவுக்கு வளர்ந்தது. ஏராளமான புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் வந்தது. படிப்பதில் மட்டும் கெட்டிக்காரியாக இல்லாமல் பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வேன். மேடை நாடகங்கள் என்றால் நான் தான் எப்போதுமே கர்ணன் வேஷம் போடுவேன். ஒரு முறை பள்ளியில் மேடை நாடகத்தில் நான் நடிப்பதை பார்த்த கலெக்டர் எனக்கு கோடை இடி என்ற பட்டத்தைக் கொடுத்தார்.  மைக் இல்லாமல் மிகவும் சத்தமாக நான் பேசியதால் எனக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது. பள்ளியில் அனைவராலும் அப்படியே அழைக்கப்பட்டேன். 


 



செய்தி வாசிப்பாளர்:


திருமணத்திற்கு பிறகு நான் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என ஆசைப்பட்டு தூர்தர்ஷன் இன்டர்வியூவுக்கு சென்றேன். ஆனால் நான்கு முறையும் நான் ரிஜெக்ட் செய்யப்பட்டேன். அதற்கு பிறகு தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஆட்கள் எடுப்பதாக கேள்விப்பட்டு அங்கே இன்டர்வியூவில் கலந்து கொண்டு அனைத்து ரவுண்ட்களிலும் சிறப்பாக பேசி வெற்றி பெற்றேன். 


சன் டிவி மூலம் எனக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவை நினைத்து மலைத்து போனேன். நான் என்ன உடுத்திக்கொண்டு போனாலும் மக்கள் அதை ட்ரெண்ட் செய்ததை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது என தெரிவித்து இருந்தார் நிர்மலா பெரியசாமி. நல்ல செய்திகளை படிக்கும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். அதே போல விபத்து, மரணம் போன்ற துக்கமான செய்திகளை வாசிக்கும் போது மனம் பாரமாகிவிடும் என்றார் நிர்மலா பெரியசாமி.