Theni Lok Sabha constituency: தேனி மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொடர்ந்து அலசி வருகிறோம். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
தேனி மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:
2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது, பெரியகுளம் மக்களவைத் தொகுதி தேனி மக்களவைத் தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுடன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான் (தனி) மற்றும் உசிலம்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் தேனி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
தேனி மக்களவைத் தொகுதி எப்படி?
முல்லைப் பெரியாற்றின் இருகரைகளிலும் திராட்சை, நெல், வாழை, தென்னை என பச்சை பசேல் என்று விவசாயம் நிறைந்த பூமியாக தேனி மக்களவைத் தொகுதி காட்சியளிக்கிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த தொகுதி, ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக இருக்க, சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், விவசாயம் தொடர்பான தொழில்கள் அடுத்தபடியாக உள்ளன. தொகுதிக்குள் இருக்கும் வடுகபட்டி பூண்டுச் சந்தைதான் தென்னிந்தியாவிலேயே பெரிய பூண்டுச் சந்தை. இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்து சிறுபான்மையினர், நாயக்கர், நாடார், கவுண்டர் உள்ளிட்ட சமுதாயத்தினர் பரவலாக காணப்படுகின்றனர்.
தேனி தொகுதியின் முக்கிய பிரச்னைகள்:
தொகுதியில் நீராதாரங்கள் ஏராளமாக இருந்தாலும், பல மாதங்கள் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் தொடர்ந்து குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. அணைகளை தூர்வாருதல், விவசாய மற்றும் சுற்றுலாத் தல மேம்பாடு, வேலைவாய்ப்பு இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்குத் தீர்வு, புறவழிச்சாலை, புதைசாக்கடை உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் தற்போதும் நிலவுகின்றன. ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் சிறுதொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்க, நியூட்ரினோ திட்டம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. முல்லை, வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாப்பது, திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் ஆகியவை நீண்டகால கனவுகள். திராட்சை, மாம்பழம் இருப்பு வைக்கவும், மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றவும் குளிர்பதன கிட்டங்கிகளும் தொழிற் சாலைகளும் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
தேனி மக்களவைத் தொகுதி அதிமுகவின் தொகுதி என கூறும் வகையில், இதுவரை 9 முறை அங்கு அக்கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது. இத்தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் வென்று தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர் ஆகியுள்ளனர். 1984-ல் வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆரை வெற்றிபெற வைத்த தொகுதியும் ஆண்டிபட்டி தான். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் போடி தொகுதியில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
2009 | ஜே.எம். ஆரூண்ரஷித் | காங்கிரஸ் |
2014 | ஆர். பார்த்திபன் | அதிமுக |
2019 | ரவீந்திரநாத் | அதிமுக |
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் - 7,92,195
பெண் வாக்காளர்கள் - 8,20,091
மூன்றாம் பாலினத்தவர் - 217
மொத்த வாக்காளர்கள் - 16,12,503
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
ஆண்டிப்பட்டி - மகாராஜன் (திமுக)
பெரியகுளம் (தனி) - சரவண குமார் (திமுக)
போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர் செல்வம் (அதிமுக)
கம்பம் - ராமகிருஷ்ணன் (திமுக)
சோழவந்தான் (தனி) - வெங்கடேசன் (திமுக)
உசிலம்பட்டி - ஐயப்பன் (அதிமுக)
ரவீந்திரநாத் எம்.பி., சாதித்தாரா? சறுக்கினாரா?
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே நபர் ரவீந்திரநாத் மட்டுமே. ஆனால், அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அதுதொடர்பான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேநேரம், இவர் தொகுதி பக்கம் வந்து மக்களை பார்த்ததே இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. தொகுதிக்கு அவர் செய்த நலத்திட்டங்கள் தொடர்பாக விசாரிக்க செய்தியாளர்கள் முயன்றபோதும், ரவீந்திரநாத்தை அணுக முடியவில்லை என்பதே களநிலவரமாக உள்ளது.
40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக்கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் எம்.பி சுத்தமாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. ஆண்டிபட்டி பகுதி மலர் விவசாயிகளுக்காக சென்ட் தொழிற்சாலை, மா விவசாயிகளுக்காக மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை, வாழை மற்றும் காய்கனி விவசாயிகளுக்கான குளிர்பதனக் கிடங்குகளெல்லாம் அமைத்துத் தரப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் வார்த்தைகளாகவே நின்றுவிட்டன. சாக்கலூத்து உள்ளிட்ட பல சாலைத் திட்டங்கள் எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் முதல் குமுளி வரை ரயில் பாதைத் திட்டம், தேனியில் கேந்திரிய வித்யாலயா மத்திய அரசுப் பள்ளி, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள், மகளிர் சுய உதவிக் குழுவிலுள்ள பெண்களுக்காகத் தொழிற்பயிற்சிக் கூடம் போன்ற எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. மொத்தத்தில் ரவிந்திரநாத்திற்கு தொகுதியில் ஒரு நற்பெயர் இல்லை என்பதே உண்மை.