கடந்த ஜனவரி மாதம், ஹாலிவுட் பிரபலம் நிக் ஜோனஸ், இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா தம்பதியினரின் குழந்தை மாலதி மேரி சோப்ரா ஜோனஸ் பிறந்த செய்தியை இருவரும் மகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தனர். சுமார் 100 நாள்கள் குழந்தைகளுக்கான ஐ.சி.யூவில் கழித்த இந்தக் குழந்தையின் படத்தைக் கடந்த மே மாதம் முதன்முதலாக பகிர்ந்திருந்தனர் தம்பதியினர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், சமூக வலைத்தளங்களில் தங்கள் குழந்தையின் படத்தைப் பகிர்ந்தது குறித்து பேசியுள்ளார் நிக் ஜோனஸ். 


தங்கள் குழந்தையின் மருத்துவமனை வாழ்க்கையில் இருந்து தனக்கும் ப்ரியங்கா சோப்ராவுக்கும் பெற்றோர் வாழ்க்கை தொடங்கியதை முக்கியமானதாகக் கருதுவதாகக் கூறும் நிக் ஜோனஸ், `எங்கள் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்த போது, நாங்கள் பெற்றிருந்த உணர்வை எங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தோம்.. இது எங்களைப் போல மருத்துவமனையில் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் அனைவருக்குமாக எங்கள் உணர்வைப் பகிர்ந்தோம்.. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது வேறு சவால்கள் இருக்கலாம்.. ஆனால் உங்கள் பயணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார். 



கடும் சவால்களுக்கு இடையிலும் ப்ரியங்கா சோப்ரா தனக்கான மிகச்சிறந்த இணையாக இருப்பதாகக் கூறிய நிக் ஜோனஸ், ப்ரியங்கா அனைத்து நேரங்களிலும், இருவரது வாழ்க்கைப் பயணத்திலும் ஒரு பாறையைப் போல அனைத்தையும் பொறுத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்த பிறகு, எப்போதும் குழந்தை பற்றியே இருவரும் பேசுவதாகவும் நிக் ஜோனஸ் தெரிவித்துள்ளார். 






மேலும், இதே நேர்காணலில் குடும்பமாக ப்ரியங்கா சோப்ரா முதன்முறையாக அன்னையர் தினம் கொண்டாடியதையும், அவர் ப்ரியங்காவுக்கு சிட்ரஸ் மரம் ஒன்றை அன்பளிப்பாக அளித்ததையும் குறிப்பிட்டுள்ளார். தம்பதியினர் இருவரும் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்திருப்பதைக் குறிக்கும் விதமாக, வளர்ச்சியையும், புதிய தொடக்கங்களையும் அடையாளப்படுத்தும் சிட்ரஸ் மரத்தை அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக நிக் ஜோனஸ் கூறியுள்ளார்.