மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி திருமணம் பிப்ரவரி 7 ஆம் தேதியன்று இனிதே நடைபெற்றது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் முதன்முறையாக விமான நிலையத்தில் ஜோடியாக தென்பட்டனர். மும்பை விமானநிலையத்தில் சிறப்பு வாயில் வழியாக வந்த அவர்களை விஷயமறிந்த பாப்பராஸிகள் சூழ்ந்து கொண்டனர். திருமண பூரிப்புடன் மஞ்சள் நிற ஆடையில் கூடுதல் அழகுடன் மிளிர்ந்தார் கியாரா அத்வானி. கூடவே புது மனைவியை அதுவும் காதல் பைங்கிலியை கரம் பிடித்து கனிவாக அழைத்துவந்தார் சித்தார்த் மல்ஹோத்ரா. அவர் வெள்ளை ஜிப்பா, பைஜமாவில் இருந்தார். மஞ்சளும், வெள்ளையும் குளிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் பொருத்தமாக இருந்தது.
கியாரா - சித்தார்த் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் கூறிக்கொண்டதில்லை. இந்தக் கேள்வியை இருவரிடமும் முன்வைத்தால், முதலில் இருவரும் வெட்கப்படுவார்கள், பின்னர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள்.
யார் இந்த கியாரா?
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. கூல் கேப்டன் என பெயர் எடுத்த தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர். தற்போது பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் ஆர்.சி. 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
கியாரா அத்வானி இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு நடிகை. 2014ல் வெளிவந்த ஃபுக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். திரைப்படத்தில் அறிமுகமாகும் முன் கியாரா அனுபம் மற்றும் ரோஷன் தனேஜா ஆகியோரிடம் நடிப்பிற்கான பயிற்சியை பெற்றார்.
இருந்தாலும் கியாரா அத்வானி எம்.எஸ். தோனி படத்தில் நடித்த பின்னர் மிகுந்த கவனம் பெற்றார். அதன் பின்னர் நெட்ஃப்ளிக்சில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் (2018), மற்றும் தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனு (2018) போன்ற பல்வேறு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற திரைப்படங்களில், சீரிஸ்களில் நடித்துள்ளார். தற்போதும் அவர் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். அவர் நல்ல நடிகையாக அறியப்படுகிறார்.
கியாரா 1992 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி பிறந்தார். அவர் முதன்முதலாக கேமரா முன்னால் தோன்றியது ஒரு விளம்பரப் படத்திற்காக. அப்போது அவர் ஒரு கைக்குழந்தையாக இருந்தார். விப்ரோ பேபி சோப் விளம்பரத்தில் கியாரா குழந்தையாக குளியல் போட உடன் அவர் அம்மாவும் திரையில் தோன்றியிருப்பார்.
கியாரா அத்வானியின் தந்தை ஜகதீப் அத்வானி. அவரது தாயார் ஜெனீவ் ஜாஃப்ரி. ஜகதீப் அத்வானி ஒரு தொழிலதிபர். கியாராவின் இயற்பெயர் ஆலியா அத்வானி என்பதே. இவர் திரைத்துறைக்காக தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றினார். பிரியங்கா சோப்ராவின் அஞ்சனா அஞ்சானி திரைப்படத்தை, பார்த்து தனது பெயரை கியாரா என்று மாற்றிக்கொண்டார் என்ற தகவலும் உண்டு. பிரியங்கா சோப்ராவின் மிக பெரிய ரசிகை கியாரா அத்வானி
கியாராவின் தாய்வழி குடும்பத்தின் மூலம் பல பிரபலங்கள் இவருக்கு உறவினர் ஆவார்கள். நடிகர்கள் அசோக் குமார் மற்றும் சயீத் ஜாஃப்ரி ஆகியோர் முறையே, இவரது தாத்தா, பாட்டி ஆவார்கள். அதே போன்று ஷாஹீன் ஜாஃப்ரி மற்றும் நடிகை ஜூஹி சாவ்லா இவருடைய அத்தையாவார்கள். இத்தனை அழகான, திறமையான பின்னணி கொண்ட கியாரா அத்வானியின் அழகையும் திறமையையும் யாரேனும் கேள்விக்குறியாக்க முடியுமா என்ன?
இத்தகைய பின்புலம் கொண்ட கியாரா ஒருமுறை அவர் அளித்தப் பேட்டியில் திரைத்துறையில் குடும்பப் பின்னணி இருந்தால் அது நிச்சயமாக நீங்கள் வாய்ப்பு தேடும் போது சரியான நபர்கள் முன் உங்களை நிறுத்தும். ஆனாலும் திரைத்துறையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இந்த பின்னணி எல்லாம் உதவாது. திறமை மட்டுமே பேசும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.