இயக்குநர் மாதவன் :
தென்னிந்திய சினிமாவில் சாக்லெட் பாய் என்ற அந்தஸ்தோடு வலம் வந்தவர் நடிகர் மாதவன். பாலிவுட் திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். என்னதான் மாதவனுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தாலும் கூட அவர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை வெர்சடைல் நடிகராக அடையாளப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டதாக கூறுகிறார். மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
வாழ்க்கையை படமாக்கும் மாதவன் :
மாதவன் தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். படத்திற்கு ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே செய்திருக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியானது. ட்ரெய்லரில் நடிகர் சூர்யாவும் இடம்பெற்றுள்ளார். தெருநாய், தேசத்துரோகி போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ஜூலை 1-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சூர்யாவும், ஷாருக்கானும்..
முன்னதாக படம் குறித்து பேசிய மாதவன், நடிகர்கள் சூர்யா, ஷாருக்கானுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். குறிப்பாக இருவருமே ஒரு ரூபாய்கூட சம்பளம் பெறாமல் இப்படத்தில் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய மாதவன், ராக்கெட்ரி திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஷாருக்கான், சூர்யா இருவருமே ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை. கேரவன்கள், உடைகள், உதவியாளர்கள் என எதுக்குமே அவர்கள் சம்பளம் வாங்கவில்லை.
அனைத்தையுமே அவர்கள் சொந்த செலவில் செய்துகொண்டார்கள். மும்பையில் நடைபெற்ற ஷூட்டிங்குக்கு சூர்யா சொந்த செலவில் விமானம் ஏறி வந்தார். விமான டிக்கெட்டுக்கான காசைக் கூட அவர் வாங்கவில்லை. சினிமா உலகத்தில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். நான் வெளியில் இருந்து சினிமாவுக்குள் வந்தவன் . மக்கள் எனக்கு பல உதவிகளை செய்துள்ளனர். நான் வேண்டுகோள் விடுத்தேன் என்பதற்காக படத்தை ஆதரித்து அமிதாப்பச்சனும், பிரியங்கா சோப்ராவும் ட்வீட்செய்தனர் என்றார்